மக்கள் நீதிமய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடைசெய்ய வேண்டும் - ராஜேந்திர பாலாஜி காட்டம் | TN Minister Rajendra balaji slams kamalhaasan

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (13/05/2019)

கடைசி தொடர்பு:21:50 (13/05/2019)

மக்கள் நீதிமய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் தடைசெய்ய வேண்டும் - ராஜேந்திர பாலாஜி காட்டம்

``சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக இந்துக்களை அவதூறாகப் பேசி வரும் கமல்ஹாசனின் நாக்கு அறுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல்ஹாசனின் கட்சியைத் தடை செய்யவேண்டும்." என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

ராஜேந்திர பாலாஜி

தூத்துக்குடியில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல் தீவிரவாதி இந்துதான் என்று கமல்ஹாசன் பேசியது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை வாக்குகளை பெற இவ்வாறு பேசியதற்காக கமல்ஹாசன் நாக்கு அறுக்கப்பட வேண்டும். அவரது விஷம் கக்கிய பேச்சால் கமல்ஹாசன் கொழுப்பேறிய  நாக்கை இந்துக்கள் அறுக்க வேண்டிய நிலை ஏற்படும். 

இஸ்லாமியத்தில் யாரோ ஒருவர் தீவிரவாதம் செய்தால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. இந்தியாவில் இந்துக் கோயிலை கிறிஸ்தவர்கள் வணங்குகின்றனர். கிறிஸ்தவ ஆலயங்களில் இந்துக்கள் வழிபாடு செய்கின்றனர். அண்ணன் தம்பியாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்த மதத்தையும் புண்படுத்தபடும் படியாகப் பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். 

 தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. அந்நிய சக்திகளுக்காக கமல்ஹாசன்  பேசிவருகிறார். அவரது  பேச்சில் வெளிநாட்டு சதி  உள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கமல் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், தேர்தல் ஆணையம் தலையிட்டு கமலின் கட்சியைத் தடை செய்யவேண்டும். அ.தி.மு.க ஆட்சியையும் கட்சியையும் குறை சொல்லும் தகுதி கமலுக்குக் கிடையாது. பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ராகுல் காந்தியை முன்னிறுத்திய நிலையில், மூன்றாவது அணி அமைவது தொடர்பாக தலைவர்களைச் சந்திக்கும் சந்திரசேகர் ராவ் சந்திப்பு குழிபறிக்கும் செயல். காங்கிரசுக்கு செய்யும் பச்சை துரோகம். ஸ்டாலின் நாலாவது அணி அல்ல ஐந்தாவது அணி வந்தாலும் பேசுவார். 

ராஜேந்திரபாலாஜி


ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார். அவருக்கு நிலையான கொள்கை கிடையாது. ஒழுக்கமான அரசியல் நெறிமுறை தெரியாதவர்கள்தான் தி.மு.கவினர். கூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதுதான் அவர்களின் வேலை. தி.மு.க என்றாலே தில்லு முல்லு கட்சிதான். அ.ம.மு.கவும் தி.மு.கவும் ஒன்றுதான். இவர்கள் இருவர் மட்டும் அ.தி.மு.கவின் எதிரிகள். அ.தி.மு.கவில் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், தினகரனை மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க