`டீக்கடை சிறுசு.. மனசோ பெருசு! ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ்! #MyVikatan | pudukottai tea shop owner attracts his customers with news offers

வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (14/05/2019)

கடைசி தொடர்பு:10:39 (14/05/2019)

`டீக்கடை சிறுசு.. மனசோ பெருசு! ‘ - இந்த வெள்ளந்தி மனிதருக்கு எத்தனை லைக்ஸ்! #MyVikatan

கஜா புயல்...., டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை ஈவு இறக்கமே இல்லாமல் சிதைத்துப் போட்டுவிட்டுப் போனது. கஜா புயலை எப்படி அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ, அதேபோலதான் வம்பன் 4 ரோடு பகவான் டீக்கடையை புதுக்கோட்டை மக்களால் எளிதில் மறக்க முடியாது.

puthukottai

கஜா புயலால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில், புதுக்கோட்டை அருகே வம்பன் 4 ரோட்டில் பகவான் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்ற இளைஞர், `தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இவர் கடைக்கு வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்பதால், அத்தனைப் பேருக்கும் மகிழ்ச்சி. 

``இப்போது வெளியூரிலிருந்து எல்லாம் டீ குடிப்பதற்காக என் கடையைத் தேடி வருகின்றனர். கஜா புயலுக்குப் பிறகு கடந்த 6 மாதத்தில் 190 ஆக இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்திருக்கு" என்கிறார் பெருமிதமாக.

அடுத்து என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என சிவக்குமாரிடம் பேசினோம், ``பச்சிளங்குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் சமீபத்தில் ஆரம்பித்தேன். தற்போது, ஏழ்மைக் குடும்பங்களின் பச்சிளங்குழந்தைகளுக்கு மட்டும் பசும்பால் இலவசமாக வழங்குகிறேன். தொடர்ந்து, குழந்தைகளுக்காக, பால் வாங்குபவர்கள் அனைவருக்கும் பால் இலவசம் என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். அடுத்ததாக, வனமகள் சேமிப்புத் திட்டம், அதாவது வாடிக்கையாளர்களுக்குச் செம்மரம், சந்தன மரங்களின் கன்றுகள் கொடுக்க உள்ளேன். நிச்சயம் வாடிக்கையாளர்கள் விலை உயர்ந்த மரங்கள் என்பதால் கொடுக்கும் கன்றுகளை வளர்ப்பார்கள். கன்றுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். பருவமழை துவங்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க உள்ளேன். கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் எங்க ஊர் மக்களால் மீள முடியவில்லை. இதற்காக, ஒரு நாள் மட்டும் டீ விருந்து நடத்தி அதில் சேகரிக்கப்படும் பணத்தை ஏதோ ஒரு கஜா நிவாரணத்துக்குப் பயன்படுத்த உள்ளோம். இதையெல்லாம் முடித்துவிட்டு வேறு திட்டங்களை யோசிக்கணும்" என்கிறார்.

பகவான் டீக்கடையில் இருந்து, சொற்ப வருமானம்தான் சிவக்குமாருக்கு கிடைக்கிறது. அந்த சொற்ப வருமானத்தையும் வாடிக்கையாளர்கள், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் சிவக்குமார் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

அவரின் வெள்ளந்தி பேச்சு, அன்பு, பிறர்மேல் காட்டும் இரக்கம் அனைத்தும்தான் பகவான் டீக்கடையை நோக்கி அனைவரையும் இழுத்துச் செல்கிறது. பகவான் டீக்கடையின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளுக்காகப் புதுக்கோட்டை மாவட்டமே காத்திருக்கிறது.