சமயபுரம் பாகனைக் கொன்ற மசினி யானை... முதுமலையில் இப்போது எப்படி இருக்கிறது? | How the Masini elephant recovers from its Past

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (14/05/2019)

கடைசி தொடர்பு:10:58 (20/05/2019)

சமயபுரம் பாகனைக் கொன்ற மசினி யானை... முதுமலையில் இப்போது எப்படி இருக்கிறது?

குறும்புத்தனம் மிக்க ஆரோக்கியமான இளம் யானையாகச் சென்ற மசினி மெலிந்த தேகத்துடனும், உடலில் காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத மிகச் சோர்வான அடையாளம் தெரியாத நிலையில் பாகனைக் கொன்ற கொலைப்பழியோடு முதுமலைக்கு வந்து இறங்கியது.

சமயபுரம் பாகனைக் கொன்ற மசினி யானை... முதுமலையில் இப்போது எப்படி இருக்கிறது?

டலில் காயம், மெலிந்த தேகம், கண்களில் பயம், மிரட்சி, சோர்வு, பாகனையே கொன்ற துயரநிலை என மோசமான கட்டத்தில் தஞ்சை கோயிலிலிருந்து முதுமலை திரும்பிய மசினி யானை, தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது

முதுமலையில் மசினி

2007-ம் ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கார்குடி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தவித்து வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது கார்குடி மசினியம்மன் கோயில் அருகே, பிரிந்த குட்டியானை மயக்க நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டுவந்து சிகிச்சையளித்தனர். முதுமலை பழங்குடி மக்களின் குலதெய்வமான மசினியம்மன் கோயில் அருகே குட்டி யானை மீட்கப்பட்டதால், அந்த யானைக் குட்டிக்கு மசினி எனப் பெயர் சூட்டினர்.

Masini elephant

மாயாற்றங்கரையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட  தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், மசினிக்கு  பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. முகாமின் செல்லக் குழந்தையாகவே சுற்றிவந்தது. முகாமில் உள்ள பாகன்களும் மற்ற யானைகளும் குட்டி யானை மசினியின் மீது அளவுக்கு அதிகமாக அன்பைக் காட்டினர். கரும்பு, வெல்லம் என விரும்பியதைத் தின்று மாயாற்றில் குளித்துவந்தது.

மசினி யானை

யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் மணி அடித்துச் சிறப்பு பூஜைகள் செய்து வந்தது. விநாயகர் சதுர்த்தியின்போது மசினி பூஜை செய்ததும் விநாயகரை வணங்கியதும் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது. இதுவே மசினிக்கு ஆபத்தாக முடிந்தது. மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம்  திருச்சி சமயபுரம் கோயிலுக்கு மசினி லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. தெப்பக்காடு முகாமில் உள்ள பாகன்களும் மற்ற யானைகளும் வருத்தத்துடன் விடையளித்தனர். யானைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் முதுமலையிலிருந்து  திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்ற மசினியின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன. முதுமலையில் மிகவும் சந்தோஷமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்த மசினி, சமயபுரம் கோயிலில் மிக இறுக்கமாகவே காணப்பட்டு வந்துள்ளது.

Masini Elephant

இந்த நிலையில், கடந்த ஆண்டு கோயில் வளாகத்துக்குள் பாகன் கஜேந்திரனைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பாகன் உயிரிழந்தார். அந்த சமயம் பக்தர்களையும் விரட்டத் தொடங்கியது. பின்னர் கோயிலின் கதவுகள் பூட்டப்பட்டு பிற கோயில் யானைப் பாகன்கள் வரவழைக்கப்பட்டு கால்களில் இரும்புச் சங்கிலியுடன் பிணைத்தனர். இதைத் தொடர்ந்து மசினி யானை ஓரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மசினி உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமலும், படுத்து எழமுடியாமலும் தவித்து வந்தது. இந்த நிலையில், யானையை முதுமலை முகாமுக்கு அழைத்துச் செல்லக்கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின் என்பவர், உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

மசினி யானை

திருச்சி சமயபுரம் கோயிலில், பாகனையே மிதித்துக் கொன்ற, மசினி யானையை அதன் வாழ்விடமான முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி மசினி யானை தாய்வீடான முதுமலைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது. குறும்புத்தனம் மிக்க ஆரோக்கியமான இளம் யானையாகச் சென்ற மசினி மெலிந்த தேகத்துடனும், உடலில் காயங்களுடனும், நடக்கக்கூட முடியாத மிகச் சோர்வான அடையாளம் தெரியாத நிலையில் பாகனைக் கொன்ற கொலைப்பழியோடு முதுமலைக்கு வந்து இறங்கியது. வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து மசினிக்கு விருப்பமான உணவுகளை வழங்கினர். தொடர் கவனிப்பு காரணமாக உடல்நிலையில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போது நடக்கவே சிரமப்பட்டு வந்த மசினி யானை தற்போது நடக்கத் தொடங்கியுள்ளது. முகாமில் இருந்து தானாக மாயாறு ஆற்றங்கரைக்கு நடந்து சென்று குளித்து மகிழ்கிறது. மசினியின் தற்போதைய பாகன் பொம்மன் கூறுகையில், ``மசினி முதுமலைக்குத் திரும்பியது முதல் மிக இறுக்கமாகவே இருந்தது. பழைய குறும்புத்தனங்கள் எதுவும் இல்லை. முன்னங்காலை எடுத்து வைத்து நடக்கவே முடியாத நிலையில் இருந்தது. முகாமில் உள்ள மற்ற யானைகளுடன் நெருங்காமல் தனியாகவே நின்றது. தற்போது உடல் மற்றும் மனதளவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றாக உணவு உட்கொள்கிறது. ஆற்றுக்கு நடந்துசென்று நீண்டநேரம் குளிக்கிறது. மற்ற யானைகளுடன் நெருங்க ஆரம்பித்துள்ளது” என்றார். 

Masini Elephant

வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில். ``மசினி உடலில் காயங்கள் குணமடைந்து வருகிறது. முதுமலை தெப்பக்காட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டபோது 1900 கிலோ எடை இருந்தது . தொடர் சிகிச்சைகள், கவனிப்பு காரணமாக நல்ல உடல்நிலையுடன் உள்ளது. உடலில் இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனையில் மசினிக்கு வேறு எந்த வித நோய் பாதிப்புகளும் இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மற்ற வளர்ப்பு யானைகளுடன் அவை சேர்க்கப்பட்டுள்ளது. மசினி தற்போது நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக உள்ளது. முதுமலைக்கு அழைத்து வந்த ஆரம்பத்தில் மாயாற்றில் குளிப்பதை விரும்பாது. தொடர்ந்து உடல்நிலை தேறிய நிலையில், தற்போது நாள்தோறும் மாயாற்றில் குளிக்கிறது. தற்போது 400 கிலோ எடை கூடியுள்ளது. நல்ல ஆரோக்கியமாகவும் உள்ளது, “என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்