புதரில் கிடந்த வில்லியம் கேம்ப்பெல்லின் கல்லறை! | William Campbell's grave found

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:11:30 (14/05/2019)

புதரில் கிடந்த வில்லியம் கேம்ப்பெல்லின் கல்லறை!

முதன் முதலில், மலப்புரம் வழியாக கூடலூர் கேலிகட் சாலை அமைத்த வில்லியம் கேம்ப்பெல்லின் 1864-ம் ஆண்டு  கல்லறை கண்டறியப்பட்டுள்ளது.

புதரில் கிடந்த வில்லியம் கேம்ப்பெல்லின் கல்லறை!- 1864ம் ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிப்பு

பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்த நீலகிரி மலைகளில், ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன. அதிலும் குறிப்பாக, நவீன நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும்  கோவை மாவட்ட கலெக்டராக 1815 முதல் 1830 வரை இருந்த ஜான் சல்லிவன்  1819-ம்  ஆண்டு நீலகிரிக்கு முதன் முதலாக வந்து ஊட்டியில் ஸ்டோன் ஹவுஸ் ஒன்றைக் கட்டினார். மேலும், ஐரோப்பிய நாடுகளைப்போன்று இங்கு நிலவிய காலநிலையில் ஈர்க்கப்பட்டு, பல ஆங்கிலேய குடியேற்றங்களை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாகவே சாலைகள் அமைத்தல், மலை ரயில், ஐரோப்பிய பாணியிலான கட்டடங்கள் கல்வி நிறுவனங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. மேலும் தேயிலை, காப்பி, ரப்பர்  போன்ற பணப்பயிர்களையும் அறிமுகம்செய்தனர். அதன் பின்னர் பல ஆங்கிலேயர்கள் குடியேறி, வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டனர்.

இதன் ஒரு கட்டமாக, மலப்புரம் வழியாக கூடலூர் கேலிகட் சாலையை உருவாக்க முக்கிய மூளையாகச் செயல்பட்டவர், அப்போதைய பொதுப்பணித்துறை மேற்பார்வையாளராக இருந்த வில்லியம் கேம்ப்பெல் [William Campbell]. இவர், முன்னின்று இந்தச் சாலையை வெற்றிகரமாக அமைத்துள்ளார். பின்னர், தீராத காய்ச்சல் காரணமாக 1864-ம் ஆண்டு  கூடலூர் தேவாலா அருகில் இருந்த ஆய்வு மாளிகையில் இறந்துள்ளார். இவரது இறப்பு, அப்போது செயல்பட்டுவந்த தேவாலா மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் தங்கியிருந்த ஆய்வு மாளிகையின் அருகிலேயே அடக்கம் செய்துள்ளனர்.

புதரில் கிடந்த வில்லியம் கேம்ப்பெல்லின் கல்லறை

காலப்போக்கில் இந்தக் கட்டடம் இல்லாமலேபோனது. தற்போது, வனத் துறையினரின் ரோந்துப் பணியின்போது, நாடுகாணி அருகே  புதர் மண்டிய நிலையில் காணப்பட்ட மிகப் பழைமையான இந்தக் கல்லறையைக் கண்டனர். பின்னர், இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்தக் கல்லறையை மூடியிருந்த புதர்கள் அகற்றப்பட்டு, இது கூடலூர் கேலிகட் சாலையை உருவாக்கிய வில்லியம் கேம்ப்பெல் கல்லறை என உறுதிசெய்துள்ளனர். நீலகிரியில் உள்ள பழைமையான கல்லறைகளில் ஒன்றாக வில்லியம் கேம்ப்பெல் கல்லறை கண்டறியப்பட்டுள்ளது. அப்போது இவர் அமைத்த சாலையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.