20 நாள்களாக இரவில் தேர்தல்பணி!- நள்ளிரவில் இன்ஸ்பெக்டருக்கு நடந்த துயரம் | election duty si died in heart attack...

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (14/05/2019)

கடைசி தொடர்பு:11:49 (14/05/2019)

20 நாள்களாக இரவில் தேர்தல்பணி!- நள்ளிரவில் இன்ஸ்பெக்டருக்கு நடந்த துயரம்

ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ, மாரடைப்பால் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாரடைப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர்

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாசிமலை வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (52). இவர் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவப் படையினர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த 20 நாள்களாக எஸ்.ஐ மூர்த்தி பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி, நெஞ்சு வலிப்பதாகக் கூறி சரிந்து விழுந்திருக்கிறார். இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மூர்த்தியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எஸ்.ஐ மூர்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இதைக்கேட்டு அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் கதறி அழுதது பார்ப்போரை கலங்கடித்தது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ மூர்த்தி உயிரிழந்தது சம்பந்தமாக சித்தோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.