‘இயலாதோருக்கு உதவி; வீடு வீடாக மரக்கன்று விநியோகம்!’- ஆச்சர்யப்படவைக்கும் ஐ.டி இளைஞர் | Social Service of IT Youth

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/05/2019)

கடைசி தொடர்பு:13:55 (14/05/2019)

‘இயலாதோருக்கு உதவி; வீடு வீடாக மரக்கன்று விநியோகம்!’- ஆச்சர்யப்படவைக்கும் ஐ.டி இளைஞர்

ஐ.டி-யில் வேலைசெய்யும் வேலூர் இளைஞர் ஒருவர், இயலாதோருக்கு உதவிசெய்து, வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கி சமூக சேவை செய்துவருவதன்மூலம் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

இளைஞர் தினேஷ் சரவணன்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதிய அரசியல் விழிப்புணர்வும், சமூகப் பொறுப்புகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. தெளிவான சிந்தனையுடன் எல்லாவற்றையும் யோசித்துச் செயலாற்றுகிறார்கள். மனிதநேயம் மரித்துப்போகாமல் இருப்பதற்குப் பல இளைஞர்களின் பங்களிப்பும் காரணம். அதுபோன்ற ஒரு இளைஞரின் சேவைதான், வேலூர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுத்தந்திருக்கிறது. சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்த தினேஷ் சரவணன் (30) என்ற அந்த இளைஞர், சாதாரண பால் வியாபாரியின் மகன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேலூருக்கு வந்துவிடுவார். 

இளைஞர் தினேஷ் சரவணன்

சமூக சேவையில் ஆர்வமுள்ள தினேஷ் சரவணன், ‘அப்துல் கலாம் மாணவர் முன்னேற்ற சேவா சங்கம்’ என்ற அமைப்பில் மாநிலச் செயலாளராக இருக்கிறார். இரண்டு நாள் விடுமுறையில் ஊருக்கு வரும் அவர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை வழங்குவது, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, மாற்று உடை வழங்குவது போன்ற உதவிகளை நண்பர்களுடன் சேர்ந்து செய்கிறார். அதோடு, வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி, மரம் வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார். சமீபத்தில், சத்துவாச்சாரி பகுதியில் சுமார் 300 வீடுகளுக்கு துளசிச் செடிகளைக் கொடுத்துள்ளார். ‘‘துளசிச் செடியை வளர்ப்பதன்மூலம் தூய காற்றைப் பெறலாம்’’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இளைஞர் தினேஷ் சரவணன்

தினேஷ் சரவணன் கூறுகையில், ‘‘வாழ்க்கை முழுவதும் மற்றவர்களுக்கு என்னால் முடிந்தவற்றைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மரக்கன்றுகளைப் பல இடங்களில் நண்பர்களின் உதவியோடு நட்டுள்ளேன். என் சம்பளத்திலிருந்து சிறு தொகையும், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடமிருந்து கொஞ்சம் பணம் வசூலித்தும் இயலாதோருக்கு உதவுகிறேன். ஐ.டி-யில் இருப்பதால், சமூகப் பணியில் எங்கள் பகுதி இளைஞர்களை அதிக அளவு ஒருங்கிணைக்க முடியவில்லை. வேலூரில் உள்ள ‘உதவும் உள்ளங்கள்’ அமைப்பின்மூலம் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் எங்கெங்கு இருக்கிறார்களோ, அவர்களின் முகவரியை கேட்டுப் பெற்று, தேடிச்சென்று உதவுகிறோம். ரத்ததானமும் அடிக்கடி செய்கிறோம். இவற்றைப் புகழ்ச்சிக்காகவோ தற்பெருமைக்காகவோ சொல்லவில்லை. வேலூர் இளைஞர்கள் இன்னும் சிலர் எங்களுடன் கைகோத்தால், மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும். நிறையப் பேருக்கு உதவலாம்’’ என்றார் நம்பிக்கையோடு.