இந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!' - ராவ் வருகையை டெல்லிக்குச் சொன்ன ஸ்டாலின் | Reason behind for chandrasekara rao stalin meeting

வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:29 (14/05/2019)

இந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!' - ராவ் வருகையை டெல்லிக்குச் சொன்ன ஸ்டாலின்

மூன்றாவது அணி தொடர்பாகத்தான் விவாதம் நடந்தது. இதனை ராவ் வலியுறுத்தியபோது, ` மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் பக்கம் நீங்கள் வர வேண்டும்' எனக் கூறினார் ஸ்டாலின்.

இந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!'  - ராவ் வருகையை டெல்லிக்குச் சொன்ன ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். ` மூன்றாவது அணிக்கான முயற்சி நடக்கும் வேளையில் இந்த சந்திப்பால் ராகுல் வேதனைப்பட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்னரே இதுகுறித்து டெல்லிக்குத் தகவல் கொடுத்துவிட்டார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்துக்கு நேற்று மாலை 4.25 மணியளவில் வருகை தந்திருந்தார் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள், இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு குறித்து இரு தலைவர்களுமே பத்திரிகையாளர்களிடம் விளக்கவில்லை. இதுதொடர்பாக தி.மு.க வெளியிட்ட அறிக்கையிலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றே கூறப்பட்டுள்ளது. 

ராவ், ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? 

`` நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஸ்டாலின் தீவிரமாக இருந்த நேரத்தில் 2 முறை நேரில் சந்திக்க விரும்பினார் சந்திரசேகர ராவ். `தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் சந்திப்பது சிரமம்' என ஸ்டாலின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. இருப்பினும், நேரில் சந்திக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ராவ். தொடர்ந்து 4 முறை கேட்டபோது சந்திப்புக்கு மறுப்புச் சொல்ல முடியவில்லை. இந்தநிலையில், `நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன், உங்களைச் சந்திக்க முடியுமா?' எனக் கேட்டார் ராவ். `நானும் சென்னையில்தான் இருக்கிறேன், வாருங்கள் சந்திப்போம்' எனப் பதில் அளித்தார் ஸ்டாலின். சொல்லப் போனால், தவிர்க்க முடியாத காரணத்தால்தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் மூலம் காங்கிரஸ் தலைமை வருத்தப்பட்டுவிடக் கூடாது என்பதால், இதுகுறித்த தகவலை டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்குத் தெரிவித்துவிட்டார் ஸ்டாலின். ` நாம் நல்ல உறவில் இருக்கிறோம். இந்த சந்திப்பைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' எனக் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தினார்" என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், 

ராகுல் ஸ்டாலின்

`` நேற்றைய சந்திப்பில், மூன்றாவது அணி தொடர்பாகத்தான் விவாதம் நடந்தது. இதனை ராவ் வலியுறுத்தியபோது, ` மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் பக்கம் நீங்கள் வர வேண்டும்' எனக் கூறினார் ஸ்டாலின். ஆனாலும், மூன்றாவது அணிக்கான வாய்ப்புகள் எப்படியெல்லாம் இருக்கிறது என்பது குறித்து விவரித்தார் சந்திரசேகர ராவ். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், `ராகுல்காந்தி தான் பிரதமர் என ஆரம்பத்திலேயே கூறிவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளும் அதை நோக்கித்தான் போகும். எங்கள் பக்கம் வந்து நீங்கள் சப்போர்ட் செய்ய வேண்டும்' எனப் பிடிவாதமாகக் கூறிவிட்டார். `சரி...நான் யோசித்துச் சொல்கிறேன்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார் ராவ். அரசியல்ரீதியாக இந்த சந்திப்பின் நோக்கம் நிறைவேறாததால்தான், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் கிளம்பிவிட்டார் ராவ். இந்த சந்திப்பில் இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டைப் பரிமாறிக் கொண்டனர். காங்கிரஸ் தலைமையும் இந்த சந்திப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்த விவகாரத்தைப் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கவில்லை" என்கின்றனர் விரிவாக.

சந்திரசேகர ராவ், ஸ்டாலின்

சந்திரசேகர ராவ் முயற்சி குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், `` தெலுங்கானாவின் 17 எம்.பி தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அங்கு 62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சிக்குப் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர். அதன்படியே தேர்தல் முடிவுகள் அமைந்தால், மூன்றாவது அணி என்ற ஒன்று உருவாகும். `நாம் பிரதமராகலாம்' என மாநிலங்களில் உள்ள பிரதானக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் சந்திரசேகர ராவ்.

ராவ், ஸ்டாலின் சந்திப்பு

சொல்லப் போனால், கடந்த ஆண்டே இதற்கான முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் ராவ். அதன் ஒரு பகுதியாக நேரடியாக ஸ்டாலினை அவருடைய வீட்டுக்கே வந்து சந்தித்தார். ஆனால், `நாங்கள் காங்கிரஸ் பக்கம் இருப்போம்' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் முரண்பாடு இருப்பதால், ஒய்.எஸ்.ஆர் கட்சி ஜெகன் மோகனுடன் நெருக்கம் காட்டுகிறார் ராவ். மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் பெருகி, மூன்றாவது அணிக்கான சாத்தியக் கூறுகள் உருவாகும் என ராவ் உட்பட சில மாநிலங்களின் முதல்வர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே தான், தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் வகையில் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்" என நிலவரத்தை விவரித்தனர்.