`எந்த வரைமுறையும் இல்லை... விருப்பம்போல் கட்டணம் வசூல்!'- சி.பி.எஸ்.இ பள்ளிகள்மீது புகார் | will government take action against cbsc schools collection exorbitant fees

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:51 (14/05/2019)

`எந்த வரைமுறையும் இல்லை... விருப்பம்போல் கட்டணம் வசூல்!'- சி.பி.எஸ்.இ பள்ளிகள்மீது புகார்

'சி.பி.எஸ்.இ பள்ளிகளில் வரைமுறை இல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்று தமிழக அரசிடம் புகார் தெரிவித்துள்ள தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம், இதைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளி

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செ.அருமைநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவைச் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து செ.அருமைநாதனிடம் பேசினோம்.

“சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு ஒதுக்கீடு இடங்களின் விவரமும், அதற்கு விண்ணப்பிக்கும் முறையும், அரசு இணையதள வழியில் ஏற்பாடுசெய்துள்ளதால், எளிதாக விண்ணப்பிக்க முடிகிறது. ஆனால், சி.பி.எஸ்.இ பள்ளிகளின் 25 விழுக்காடு ஒதுக்கீடு இடங்கள்குறித்த விவரம், இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், பெற்றோர்கள் விவரம் அறிய முடியாமலும் விண்ணப்பிக்க முடியாமலும் அவதிப்படுகிறார்கள்.  தகுதியுடைய குழந்தைகள் அருகில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்து பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க கடைசி நாளான மே 18-ம் தேதிக்குள் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் 25 விழுக்காடு ஒதுக்கீடு இட விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்'' என்று அரசை வலியுறுத்தியிருக்கிறோம்.

''பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, வெளிப்படையாகவே பெரும் தொகையை நன்கொடையாக வாங்குகிறார்கள் என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துவருகிறார்கள். எனவே, மாணவர் சேர்க்கையின்போது சிறப்புக் குழு அமைத்து சோதனை மேற்கொண்டு, தவறு செய்யும் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தி, அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு, சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்துவந்தது. அந்தப் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தங்கள் பள்ளிகளுக்கு கட்டணக்குழு கட்டணம் நிர்ணயம் செய்யக் கூடாது எனவும், அந்தப் பள்ளிகளே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ளலாம் எனவும் 28.1.2016ல் இடைக்கால தீர்ப்பு பெற்றுவிட்டனர். கட்டணக்குழு மூலம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டபோதே, அந்தப் பள்ளிகள் நிர்ணயம் செய்ததைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். தற்போது அந்த பள்ளிகளில், எந்த வரைமுறையும் இல்லாமல் விருப்பம் போல் கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே, உச்ச நீதிமன்றத்தில் வலுவாக வாதாடி, சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் கட்டணக் குழுவே கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க