செல்லும் இடமெல்லாம் விதைகளைத் தூவும் `சட்டை அணியா சாமியப்பன்’! #MyVikatan | Over the last 20 years, this old man does not wear shirt to insist on organic farming

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (14/05/2019)

கடைசி தொடர்பு:13:00 (14/05/2019)

செல்லும் இடமெல்லாம் விதைகளைத் தூவும் `சட்டை அணியா சாமியப்பன்’! #MyVikatan

இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் விதமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டை அணியாமல் சுற்றித்திரிகிறார், முதியவர் சாமியப்பன்.

சாமியப்பன்
 

அவிநாசி அருகே உள்ள வாரணாசிபாளையம்தான் சாமியப்பனுக்கு சொந்த ஊர். ஆரம்பத்தில் ரசாயன உரங்களைப் போட்டு விவசாயம் செய்துவந்தவர், நம்மாழ்வாரின் அறிமுகத்துக்குப் பிறகு இயற்கை விவசாயியாக மாறிவிட்டார். 1996-ம் ஆண்டு, காந்தி ஜெயந்திக்குப் பிறகு இவர் சட்டையே அணிந்ததில்லை. வெறும் இடுப்பு வேட்டி மட்டுமே அணிந்துகொண்டு, பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விவசாய பொதுக்கூட்டங்கள் என நாடு முழுவதும் சென்று இயற்கை விவசாயம் பற்றி பிரசாரம் செய்து வருகிறார். அப்படிச் செல்லும்போதும், மடியிலே சில விதைகளைக் கட்டிக்கொண்டுபோய், ஆங்காங்கே தூவிவிடுவது சாமியப்பனின் வழக்கம். இயற்கை விவசாயம் என்பது இயற்கைக்குச் சிறிதளவும் தீங்கு விளைவிக்காமல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இங்கு இயற்கை விவசாயம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் பலர், மண்ணுக்கு அடியில் போர் போட்டு நீரை உறிஞ்சிக்கொள்கிறார்கள். அது தவறு.

"மரங்களை அழிச்சிட்டு, அதை உருவாக்க முயற்சிக்காமல் எந்த சாமியிடம் சென்று மனு போட்டாலும் மழை பெய்யாது. பல நூறு வருடங்களாக இயற்கையாகவே விதையாக விழுந்து, செடியாகி, மரமாகிக் கிளைபரப்பி நிற்கும் வனங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு, பிறகு மழை வேண்டி கழுதைகளுக்குக் கல்யாணம் செய்துவைத்தால் மழை பெய்யுமா? மரம் வளர்ப்போம் என்று வெறும் வாசகங்களை மட்டும் எழுதித் தொங்கவிட்டால் ஆகாது. அதற்கு ஆதாரமான 'விதை விதைப்போம்' என்பதில் உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான், நாம் வாழும் பூமி பசுமையாக இருக்கும் என்கிறார், சட்டை அணியா சாமியப்பன்.