மலேசிய கராத்தே போட்டியில் தங்கம்! - சாதித்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் | Girl from tamil nadu clinching gold medal karate tournament in malaysia

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (14/05/2019)

கடைசி தொடர்பு:13:29 (14/05/2019)

மலேசிய கராத்தே போட்டியில் தங்கம்! - சாதித்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்

சிறுமி இலக்கியா

கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூருக்குப் புகழ் தேடித்தந்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவி இலக்கியா

பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் கீதா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் 2 மகன்கள் உள்ளனர். முருகானந்தம் சென்னைக் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் இவரது மகள் இலக்கியா சென்னையில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து முடித்து எட்டாம் வகுப்பு செல்கிறார். இவர் பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், கேரளா, சென்னை, திருச்சி ஆகிய பகுதியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்.

இலக்கியா

கடந்த வாரம் தேசிய அளவில் மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் பலநாடுகள் கலந்துகொண்டன. இதில் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் 21 பெண்கள் பங்கேற்றனர். அதில் இலக்கியா உள்ளிட்ட 4 பேர் தமிழகம் சார்பில் கலந்து கொண்டனர்.  பல கட்டமாக நடந்த போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் கனடாவும் மோதியது. இதில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட இலக்கியா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்போதே அவர்கள் உறவினர் இனிப்பு வழங்கிக்கொண்டாடினார்கள். இந்த நிலையில் வெற்றி நாயகியின் சொந்த கிராமமான பிலிமிசை வந்தபோது பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.