`இந்த எண்ணெயைப் பயன்படுத்தியிருந்தால் உயிர் போயிருக்கும்!'- அரியலூர் ரெய்டில் அதிர்ச்சி | Officials seals Jayamkondan oil factory

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (14/05/2019)

கடைசி தொடர்பு:10:49 (15/05/2019)

`இந்த எண்ணெயைப் பயன்படுத்தியிருந்தால் உயிர் போயிருக்கும்!'- அரியலூர் ரெய்டில் அதிர்ச்சி

ஜெயங்கொண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட எண்ணெய் ஆலைக்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                     தனியார் எண்ணெய் ஆலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

ஜெயங்கொண்டம் டு கும்பகோணம் சாலையில் இயங்கி வரும் தனியார் எண்ணெய் ஆலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி  சௌமியா சுந்தரி தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்நிறுவனம் கொள்முதல் செய்யும் எண்ணெய் தரமற்றது என்றும் எண்ணெயைப் பிரித்தெடுக்கும் விதம், பில்டர் செய்யும் விதம், எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரமும் சுகாதாரமற்ற முறையிலிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பு இல்லாததால் உற்பத்திக்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

                                        உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

என்ன நடந்தது என்று விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் பேசினோம். ``இந்த ஆலை சுகாதாரமற்ற முறையில் இயங்குகிறது என்று புகார்கள் வந்ததைத் தொடர்ந்து நாங்கள் ஆய்வு செய்யச் சென்றோம். அங்கு பார்த்தபோது மனிதர்களை மட்டுமல்ல மிருகங்கள்கூட நடமாட முடியாத அளவுக்குச் சுகாதாரக் கேடாகவும் இருந்தது. அதே சமயம் கச்சா எண்ணெய், குரூட் ஆயில், வெஜிடபிள் ஆயில் என்பதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருள்களைச் சூடுபடுத்தி அதிலிருந்து பிரித்து பாமாயிலுடன் கலந்து அதை கோல்ட் என்ற வார்த்தையுடன் சூரியகாந்தி எண்ணெய் என்று மக்களை ஏமாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.

                                                     தனியார் எண்ணெய் ஆலை

மேலும், பாமாயில் பாக்கெட்டில் கடலை படத்தைப் போட்டு விற்பனை செய்துள்ளனர். அத்தோடு பாமாயில் என்று கவரில் போடாமல் குக்கிங் ஆயில் என்று போட்டு பாக்கெட்டை விற்பனை செய்துள்ளனர். இதேபோல் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.
இந்த எண்ணெயை ஒரு மாதம் உபயோகப்படுத்தினால் நிச்சயம் உயிரிழப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்குச் சுகாதாரக்கேடு மற்றும் பல்வேறு கலப்படங்கள் அடக்கிய அந்த எண்ணெயை அரியலூர், திருச்சி, பெரம்பலூர்னு பல மாவட்டங்களில் விற்பனை செய்திருக்கிறார்கள்.

                                               தனியார் எண்ணெய் ஆலையில் சுகாதார சீர்கெடு

இந்த அரசு அளிக்கும் தரச் சான்றிதழ் அக்மார்க் எண்ணெய் பாக்கெட்டில் உள்ளதா என்று மக்கள் பார்ப்பதே இல்லை. விளம்பரங்களைப் பார்த்தே வாங்கிச் சாப்பிடுகிறோம். நம் மீதுதான் முதல் தவறு உள்ளது. இதை வாங்காதே என்று சொல்லுவதற்குப் பதில் அக்மார்க் உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அத்தோடு இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறோம்'' என்று முடித்துக்கொண்டனர்.