`எடப்பாடியை முதல்வராக்க வேலுமணியும் தங்கமணியும் விரும்பவில்லை!'- டி.டி.வி.தினகரன் | Velumani, thangamani opposes over selecting EPS as CM, says T. T. V. Dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/05/2019)

கடைசி தொடர்பு:15:59 (14/05/2019)

`எடப்பாடியை முதல்வராக்க வேலுமணியும் தங்கமணியும் விரும்பவில்லை!'- டி.டி.வி.தினகரன்

சூலூரில்  டிடிவி பிரசாரம்

``எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் சசிகலா சொன்னபோது, அதில் வேலுமணிக்கும் தங்கமணிக்கும் உடன்பாடு இல்லை" என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து மாதப்பூர் பகுதியில் டி.டி.வி தினகரன் தொட்டிபாளையம், மாதப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் சசிகலா சொன்னபோது, அதில் வேலுமணிக்கும் தங்கமணிக்கும் உடன்பாடு இல்லை. பன்னீர்செல்வம் மோடியின் பக்கம் திரும்பியபோது பயத்தில் வேலுமணியும், தங்கமணியும் அவர்களுடன் ஓடப்பார்த்தார்கள். நான்  இருந்ததால், அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள். நாங்கள் பதவி வெறி பிடித்தவர்கள் அல்ல.

சிறைச் சாலையில் உள்ள ஒரு பெண்மணிக்கு இப்படி துரோகம் செய்தால் எப்படி? அவருக்கு ஆறுதல் சொல்லாவிட்டால் பரவாயில்லை. துரோகம் செய்து விட்டார்கள். ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். நாங்கள்தான் முதல்வர் ஆக்கினோம். என்னையும்தான் கைது செய்தார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய முடிந்தது?. அவர்களுக்கு மடியில் கனம் இருக்கின்ற காரணத்தால்தான் மோடிக்கு அடிமையாகிவிட்டார்கள். அரசியலில் பயப்படுபவர்கள் முறைகேடு செய்யக் கூடாது. தேர்தல் ஆணையம் சின்னம் கொடுத்துவிட்டால் போதுமா? மக்களின் ஆதரவு வேண்டும். சின்னமும், கட்சியும் மட்டும்தான் அங்கு இருக்கிறது. 95 சதவிகித தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் இவர்களைக் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம்" என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க