புதிய சிக்கலில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம்! | Salem Periyar University in trouble

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (14/05/2019)

கடைசி தொடர்பு:16:10 (14/05/2019)

புதிய சிக்கலில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அதிகப்படியான ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும்  இருக்கின்றனர். இந்தநிலையில், தற்போது உறுப்புக் கல்லூரியிலிருந்தும் ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு திரும்பி வருவது பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மேலும் நிதிச் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகம்

இதுபற்றி சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ளவர்களிடம் பேசினோம்.``சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக மேட்டூர் அரசு கலைக்கல்லூரி, பென்னாகரம் அரசு கலைக்கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரி, எடப்பாடி அரசு கலைக்கல்லூரி, அரூர் அரசு கலைக்கல்லூரி என 5 உறுப்புக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த உறுப்புக் கல்லூரிகளில் மேட்டூர் அரசு கலைக்கல்லூரியும், பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியும் அரசு நிர்வகிக்கும் அரசு கலைக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியும் பெரியார் பல்கலைக்கழகத்தின் முதல்வர்களையும், ஆசிரியர்களையும், அலுவலகப் பணியாளர்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் மேட்டூர் அரசு கலைக்கல்லூரிக்கும், பென்னாகரம் அரசு கலைக்கல்லூரிக்கும் புதியதாக முதல்வர்கள் நியமித்தும், புதியதாக ஆசிரியர்களையும், அலுவலகப் பணியாளர்களையும் நியமிக்க  தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது.

குழந்தைவேலுஇதனால், மேட்டூர் அரசு கலைக்கல்லூரியிலும், பென்னாகரம் கலைக்கல்லூரியிலும் பணிபுரியும் இரண்டு முதல்வர்கள், 40-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்கள், 25-க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளர்கள், 40-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவரும் பெரியார் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வர இருக்கிறார்கள்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் வேலையும், சம்பளமும் கொடுக்க முடியாமல் நிதி நிலை மோசமாக இருக்கிறது. இந்தநிலையில், தற்போது உறுப்புக் கல்லூரிகளிலிருந்து முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள் வர இருக்கிறார்கள். இவர்களில் தொகுப்பூதிய ஊழியர்களைக் கூட நிறுத்தி விடலாம். ஆனால், நிரந்தரப் பணியாளர்களை நிறுத்த முடியாது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பெரும் சிக்கலை உருவாக்கும் '' என்கிறார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டபோது, ``மேட்டூர் அரசு கலைக்கல்லூரியும், பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியும் அரசு நிர்வகிக்கும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற அறிவித்திருக்கிறார்கள். இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. அரசு எங்களிடம் கலந்தாலோசித்து செயல்படுத்தும். அப்போது அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பிரச்னை பற்றிப் பேசுவோம். இன்னும் ஆசிரியர் நியமனத்திற்கான அரசாரணை வெளியிடவில்லை'' என்றார்.