தட்டு வாங்கியபோது தட்டிவிட்ட கைகள்! - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி | EPS upset over an incident happened in Aravakurichi election campaign, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (14/05/2019)

கடைசி தொடர்பு:17:39 (14/05/2019)

தட்டு வாங்கியபோது தட்டிவிட்ட கைகள்! - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவத்தால் முதல்வர் கடும் அப்செட்டாகியுள்ளார். 

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி நெருங்க, நெருங்க வெயிலின் உஷ்ணத்தைவிட தொகுதி முழுவதும் பிரசார அனல் பறக்கிறது. தி.மு.க சார்பில் செந்தில்பாலாஜியும் அ.தி.மு.க சார்பில் செந்தில்நாதனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஹாகுல் அமீதும் போட்டியிடுகின்றனர். செந்தில் பாலாஜியை டார்க்கெட் செய்து அ.தி.மு.க-வினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால், தொகுதியில் செந்தில் பாலாஜிக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருந்துவருகிறது. அரவக்குறிச்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் தி.மு.க-வினர் மூலமே செந்தில்பாலாஜிக்கு செக் வைக்கும் வேலைகள் மறைமுகமாக நடந்துவருகின்றன.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தச் சூழலில் அ.தி.மு.க  வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பள்ளப்பட்டி பேரூராட்சி முஸ்லிம் மக்களிடம் வாக்குசேகரித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரிய சேர்மன் அன்வர்ராஜா, முன்னாள் வக்பு வாரிய சேர்மன் தமிழ்மகன் உசேன் ஜப்பார், ஜெ.எம்.பஷீர் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது முதல்வருக்கு முஸ்லிம்கள் அணிவிக்கும் தொப்பி வழங்கப்பட்டது. தொப்பி அணிந்தபடியே அவர் பிரசாரம் செய்தார். 

பள்ளப்பட்டி முஸ்லிம்கள் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தாம்பூலத் தட்டு ஒன்று கொடுக்கப்பட்டது. பிரசார வேனில் இருந்தபடியே அதை முதல்வர் வாங்கியுள்ளார். உயரம் அதிகம் என்பதால் தட்டைப்பிடித்திருந்த கைகள் தடுமாறியது. இதனால் தட்டுக்களை கைகள் தட்டிவிட, முதல்வரின் கைக்குத் தட்டு கிடைக்காமல் கீழே விழுந்துள்ளது. அதை அபசகுனம் என்று அங்குள்ளவர்கள் கூறினர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்செட்டாகியுள்ளார். இருப்பினும் அரவக்குறிச்சி தொகுதியில் முதல்வர் பிரசாரம் செய்து முடித்தார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய  தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``அரவக்குறிச்சி தொகுதிக்கு பிரசாரத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சீத்தப்பட்டி காலனி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இனங்கனூர், குரும்பப்பட்டி, ஆண்டிபட்டிகோட்டை, ஈசநத்தம் ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியைக் கடுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். அப்போதுதான் பள்ளப்பட்டி பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாம்பூலத் தட்டை முதல்வர் வாங்குவதற்குள் அது கீழே விழுந்ததை அபசகுனம் என்று பலர் கூறினர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொஞ்சம் கவனமாகக் கொடுத்திருக்கலாமே என்று அங்குள்ளவர்களைக் கடிந்து கொண்டார். மேலும், தாம்பூலத் தட்டை முதல்வர் கைக்குக் கொடுப்பதற்கு முன் யாரும் தட்டிவிட்டார்களா என்று வீடியோ மூலம் ஆய்வு செய்து வருகிறோம்.

ஏற்கெனவே பள்ளப்பட்டி பகுதியில் செந்தில்பாலாஜிக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் சமயத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஏற்கெனவே பள்ளப்பட்டி பேரூராட்சியில் ஓட்டுகளைப் பெற படாதபாடு பட்டுவருகிறோம். பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளைச் செய்துவருகிறோம். ஆனால், அரவக்குறிச்சி தொகுதியில் தம்பித்துரை கோஷ்டிக்கும் மாவட்டச் செயலாளர் கோஷ்டிக்கும் இடையே நடக்கும் மோதலைச் சமாளிக்க முடியவில்லை. கட்சித் தலைமையிடம் ஏற்கெனவே இந்தப் புகாரை கொண்டு சென்றுள்ளோம். அரவக்குறிச்சிக்கு நேற்று முதல்வர் வந்தபோதும் கோஷ்டி பூசல் குறித்து நேரில் தெரிவித்தோம். முதலில் தேர்தல் முடியட்டும் அதன்பிறகு, பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியில் அ.தி.மு.க தோல்வியடைந்தால் அதற்கு உள்ளடி வேலைதான் காரணம்" என்றார்.