அடிப்படை வசதியில்லாத விருதுநகர் மொட்டைமலை கிராமம்! அவஸ்தையில் நாடோடியின மக்கள்! | This village in Virudhunagar has no proper facilities for the people

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (14/05/2019)

கடைசி தொடர்பு:20:02 (14/05/2019)

அடிப்படை வசதியில்லாத விருதுநகர் மொட்டைமலை கிராமம்! அவஸ்தையில் நாடோடியின மக்கள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலைப் பகுதி நாடோடியின மக்களின் வாழ்விடம் இன்னும் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல்தான் உள்ளது.

அடிப்படை வசதியில்லாத விருதுநகர் மொட்டைமலை கிராமம்! அவஸ்தையில் நாடோடியின மக்கள்!

லைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த நாடோடியின மக்கள் தற்போது ஊர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் பக்கத்து ஊர் மக்களுக்குத் தெரிவதற்கு முன்பாகவே இவர்களுக்குத் தெரிந்துவிடும். அந்த ஊரில் தங்கி பாசிமணி, பலூன் எனக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கவரும் வகையிலான பொருள்களை விற்பனை செய்வர். எத்தனையோ சினிமாக்களிலும் இவர்களைப் பற்றிச் சொல்லியிருந்தாலும் இவர்களின் வாழ்நிலை மட்டும் இதுவரை மாறவில்லை. நாம் ஸ்மார்ட் சிட்டியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்திலும்கூட, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலைப் பகுதி நாடோடியின மக்களின் வாழ்விடம் இன்னும் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல்தான் உள்ளது. குடிநீர், சாலை, மின்சாரம், பள்ளி எனச் சாதாரண மக்களுக்குத் தேவையான எந்த வசதியும் இல்லாமலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மொட்டமலைக் கிராமம்

மொட்டமலை எம்.ஜி.ஆர். நகர்ப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நாடோடியின குடும்பத்தைச் சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு வசித்துவரும் எங்களுக்கு, அரசு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர். மேலும் அவர்கள், ``எந்த வசதியும் இல்லாத சூழலில் வாழ்ந்து வரும் எங்களால், எங்கள் வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்த முடியும்? எங்கள் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைப்பது? நாங்கள் இருக்கும் இடம் குறித்தோ, எங்கள் நிலைமை குறித்தோ அரசு சற்றும் கவலைப்படுவதில்லை" என்கின்றனர், வேதனையுடன்.

இராஜசேகரன்

ராஜசேகரன் என்பவர் கூறும்போது, ``நாங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்று, சில நாள்கள் அங்கேயே தங்கிவிடுவோம். பள்ளிகளில் படித்துவரும் எங்கள் பிள்ளைகளை இங்கேயே தனியாகத் தங்கவைக்க முடியுமா? போதிய மின்சார வசதியும் கிடையாது. அதனால் அவர்களையும் எங்களோடு அழைத்துச் சென்றுவிடுவோம்.

மொட்டமலையில் எங்கள் பிள்ளைகளுக்காகச் சிறப்புப் பள்ளி இருந்தது. ஆனால், நாங்கள் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்வதால் பாதுகாப்பு கருதி எங்கள் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்றோம். இதனால் அவர்களால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுக்கின்றனர். தற்போது அந்தப் பள்ளியையும் மூடிவிட்டனர். பள்ளியோடு சேர்த்து விடுதி வசதியும் செய்தால் நிச்சயம் எங்கள் பிள்ளைகளை இங்கேயே விட்டுச் செல்வோம். இதனால் அவர்களும் தொடர்ந்து படிப்பார்கள்" என்றார், வேதனையுடன்.

விருதுநகர் மொட்டமலைக் கிராமம்

லிங்கம் என்பவர் கூறும்போது, ``ராஜபாளையம் ரயில்வே நிலையம் அருகே தங்கியிருந்த எங்களுக்கு இங்கே இடம் ஒதுக்கித் தரப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இங்கேதான் வசித்து வருகிறோம். எங்களுக்குப் பட்டா உண்டு. ஆனால் யார் யாருக்கு எங்கே இடம் எனத் தெரியாது. சரியாக, பட்டா பிரித்துக்கொடுத்து அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். வருடத்தில் பாதி நாள்கள் வேலை இருக்காது. போதிய பொருளாதார வசதி இல்லாததால் தொழில் நடத்தவே மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, குறைந்தது 20 பேருக்காவது வங்கி மூலம் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்தால் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும்" என்றார்.

லிங்கம்

லதாலதா என்பவர் கூறும்போது, ``எங்கள் பகுதியில் போதிய மின்சார வசதி இல்லை. மின்விளக்குகள் எல்லாம் எரிவதில்லை. தண்ணீர்த் தொட்டிகள் எல்லாம் தண்ணீரின்றிக் கிடக்கிறது. எங்களுக்குக் குடிப்பதற்கோ, பிற பயன்பாட்டுக்கோ தண்ணீர் இல்லை. ஆனால், வீட்டுக்கு வீடு கழிப்பறை உண்டு. அதை எப்படி எங்களால் பயன்படுத்த முடியும்" என்றார்.

மலர்க்கொடி என்பவர் கூறும்போது, ``இங்கே உள்ள 5 தெருவிளக்குகளில் 2 மட்டுமே எரிகின்றன. மற்ற தெருவிளக்குகள் எதுவும் எரியவில்லை. இரவு நேரங்களில் பாம்பு, பூச்சிகள் எல்லாம் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன. வீடும் பழுதாகிவிட்டது. எனவே, எங்கள் இடத்தைப் பார்வையிட்டு அரசு வசதிகளைச் செய்து தர வேண்டும்" என்றார்.

அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதியே அவசியம் என்பதை இந்த அரசு புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ற உதவிகளை உடனே செய்து தர வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்