குழந்தையைக் கடத்திக்கொண்டு ஓடிய பெண்!- ஒரு கி.மீ தூரம் ஓடி மீட்ட இளைஞர்கள் | salem Youths catch woman, who kidnapped child

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (14/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (14/05/2019)

குழந்தையைக் கடத்திக்கொண்டு ஓடிய பெண்!- ஒரு கி.மீ தூரம் ஓடி மீட்ட இளைஞர்கள்

சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் ஜஸ்டின், மகாலட்சுமி தம்பதியர். இவர்களின் 3 வயது ஆண் குழந்தை சரவணன். இன்று காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அதை 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்  நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். திடீரென அவர் குழந்தை சரவணனைத் தூக்கிக்கொண்டு ஓடினார்.

குழந்தைகளுடன் தாய்

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திருடி... திருடி... என்று கத்தியவாறு அந்தப் பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஒரு கி.மீட்டர்  துரத்திச் சென்று அந்தப் பெண்ணைப் பிடித்து குழந்தையை மீட்டார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். இதனால் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபற்றி குழந்தை சரவணனின் தாய் மகாலட்சுமி, ``எங்களுக்கு நிவேதிதா என்ற 9 வயதுப் பெண் குழந்தையும், சரவணன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இன்று காலை என் குழந்தை சரவணன் வீட்டிற்கு முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு அருகில்தானே இருக்கிறான் என்று நான் வீட்டிற்குள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.

கடத்தல்காரி

திடீரென திருடி., திருடி... எனச் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தேன். என் குழந்தையை ஒரு பெண் தூக்கிக் கொண்டு ஓடுவதாக அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள். பதறிப் போய் அழுதுகொண்டே நானும் என் கணவரும் ஓடினோம். அந்தப் பெண் மெயின் ரோட்டிற்கே ஓடி விட்டார். எங்க தெருவில் உள்ள இளைஞர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து குழந்தையை மீட்டுக் கொடுத்தார்கள். என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பெண் கடந்த ஒரு வாரமாக எங்க பகுதியில் சுற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் காவல்துறை முழுமையாக விசாரணை மேற்கொண்டு அவருக்குப் பின்னாடி இருக்கும் கடத்தல் கும்பலைப் பிடிக்க வேண்டும். எங்க பகுதிகளுக்கு நிரந்தரமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பெண்ணை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அவர் தன்னுடைய பெயர் சாந்தி என்றும், விஜயா என்றும் வாகிணி என்றும் மாற்றி மாற்றிச் கூறி வருகிறார். அதே போல சொந்த ஊர் திருப்பூர் என்றும் கோவை என்று மாற்றிச் சொல்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவரை போல இருப்பதால் இன்னும் சரியான தகவல் பெற முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்கள்.