`சுளுவா சொத்துகளைப் பிரிச்சு, சுமுகமாயிருவோம்’ - கரூரில் ஒரு விசித்திர கிராமம் #MyVikatan | Karur village

வெளியிடப்பட்ட நேரம்: 22:31 (14/05/2019)

கடைசி தொடர்பு:22:31 (14/05/2019)

`சுளுவா சொத்துகளைப் பிரிச்சு, சுமுகமாயிருவோம்’ - கரூரில் ஒரு விசித்திர கிராமம் #MyVikatan

"அண்ணன், தம்பிக்குள்ள இங்கே சொத்துப் பிரிப்பதில் சண்டை சச்சரவு வருகிறதில்லை. வெட்டுக்குத்து, கோர்ட் படினு ஏறுவதில்லை. கிடாமீசை ஊர் நாட்டாமைகள் வரை விவகாரம் போவதில்லை. மதுரை மீனாட்சி, மதுக்கரை செல்லாண்டியம்மன் சாமிகள் புண்ணியத்துல, 'அண்ணனுக்கு தெக்கே, தம்பிக்கு வடக்கே'னு சுளுவா சொத்துகளைப் பிரிச்சு, சுமுகமாயிருவோம்" என்று சிலாகித்துப் பேசுகிறார்கள், கரூர் மாயனூரைச் சேர்ந்த மக்கள்.

மாயனூர்

 'இது என்ன புதுக்கரடி விடுறீங்க?' என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாமும் அதைத்தான், அந்த மக்களிடம் கேட்டோம். தொண்டையைச் செருமிக்கொண்டு, அந்த 'சுமுக சொத்துப் பிரிப்பு சூட்சுமத்தை' விவரித்தார், உருமா கட்டிய பெருசு ஒருவர்.

செல்லாண்டி அம்மன்

 "மதுரையில் அமர்ந்து நல்லபடியா ஆட்சி செய்யுற மீனாட்சியம்மனும், கரூர் மாயனூர் மதுக்கரையில் இருந்துகிட்டு, எங்களை அண்ட வருகிற துர்சக்திகளை 'சூ' என விரட்டி அடிக்கிற செல்லாண்டியம்மனும் அக்கா, தங்கச்சிங்க. மீனாட்சி அக்கா, மதுக்கரை செல்லாண்டியம்மா தங்கச்சி. கணக்குச் சொல்ல முடியாத காலத்துல, 'நான் வடக்கே இருந்து மக்களை காபந்து பண்ணுறேன்'னு செல்லாண்டியம்மன் நடைப் பயணமாகவே மாயனூருக்கு வந்திருக்கா. இங்கேயே குடியிருந்து, எங்க முன்னோருங்க குறைகளைப் போக்க ஆரம்பிச்சுருக்கா. இருந்தாலும், அக்காவை பார்க்க செல்லாண்டியம்மா மதுரைக்கும் தங்கையைப் பார்க்க மீனாட்சியம்மா மாயனூருக்கும் வந்துபோகணுமா, இல்லையா. அதனால், பக்தர்களுக்கு அசரீரி கொடுத்து, மாயனூரில் இருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரைக்கும் பாதை அமைக்கச் சொல்லி இருக்காங்க. அப்படி அமைக்கப்பட்ட பாதைதான் 'மதுக்கரை சாலை'னு இப்பவும் இருக்கு.

மாயனூர்

திண்டுக்கல் மாவட்டத்துல உள்ள நத்தம் மலையில் ஏறி இறங்குற மாதிரி முன்பு இருந்திருக்கு. மக்கள் அந்தக்காலத்துல அந்தப் பாதையைப் பயன்படுத்தி இருக்காங்க. நாளடைவில் மக்களின், 'நடராஜா சர்வீஸ்' குறைந்துபோகவும் நத்தம் மலையில் மட்டும் அந்தப் பாதை மறைந்துபோய் இருக்கு. மத்தபடி பல இடங்களில் மதுரை வரை அந்த மதுக்கரை சாலை இன்னமும் இருக்கு. இந்த மதுக்கரை சாலையையொட்டி கரூரில் வாழும் மக்கள்தான், சொத்துப் பிரிக்க, சச்சரவு வராத ஒரு உபாயத்த வச்சுருக்காங்க. அக்கா மீனாட்சி தெக்கே இருப்பதால், ஒரு குடும்பத்தில் அண்ணன்காரனுக்கு தெக்கே உள்ள சொத்தையும், செல்லாண்டியம்மா வடக்கே கொலுவிருப்பதால், தம்பிக்காரனுக்கு வடக்குப் பக்கமா உள்ள சொத்தையும் பிரிச்சுக் கொடுத்து, வம்புவழக்கில்லாமல் சொத்துப் பிரிக்கும் சோலிய முடிச்சுடுறாங்க. இன்னமும் பல இடங்களில் இது நடைமுறையில் இருக்கு" என்றார் பெருமிதமாக!