கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்த இந்து அமைப்பினர்! | BJP, RSS staged protest against Kamalhassan in Nagercoil

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:22:30 (14/05/2019)

கமல்ஹாசன் உருவபொம்மையை எரித்த இந்து அமைப்பினர்!

தேர்தல் பிரசாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனப் பேசிய கமல்ஹாசனைக் கண்டித்து நாகர்கோவிலில் இந்து அமைப்பினர் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உருவபொம்மை எரிப்பு


அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே எனப் பேசினார். அவரது பேச்சு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாகர்கோவிலில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கமல் உருவபொம்மை

அப்போது திடீரென கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். உருவபொம்மை எரிப்பதைக் கண்ட போலீஸார் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். நாகர்கோவிலில் கமல்ஹாசன் உருவபொம்மை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.