`கமல் மறுப்பு தெரிவித்தால் நானும் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | I will withdraw my words, if kamal do the same says rajendra balaji

வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (15/05/2019)

கடைசி தொடர்பு:07:53 (15/05/2019)

`கமல் மறுப்பு தெரிவித்தால் நானும் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

``இந்துக்கள் வருத்தப்பட வேண்டாம் என தான் பேசியது குறித்து கமல் மறுப்பு தெரிவித்தால், நானும் பேசியதை வாபஸ் பெறுகிறேன்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்துதான். அவர், காந்தியைக் கொன்ற கோட்சே எனப் பிரசாரத்தில் பேசியது சர்ச்சையானது. ``கமலின் நாக்கை அறுக்க வேண்டும்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் காந்தி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மதக்கலவரங்கள் குறைந்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலையாகத் தெரிந்தது. கமல்ஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் கூறினார்?

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக்கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மதவாதம் பேசுவது மதவாதத்தைத் தூண்டிவிடும். கமல்ஹாசன் பின்னணியை மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும். என்னை பதவி விலகச் சொல்லுவதற்கு கமல்ஹாசன் ஆளுநர் அல்ல. நான் எங்கும் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் பேசவில்லை. இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என்பதை கமல்ஹாசன் எப்படிச் சொல்லலாம். ஒரு மதத்தைக் கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது.

ராஜேந்திர பாலாஜி

தீவிரவாதிகள் நடத்தும் கொடூரத் தாக்குதலுக்கு குறிப்பிட்ட ஒரு மதம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. எல்லா மதத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் ஓர் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என்று கமல்ஹாசன் கூறியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சுதந்திரத்துக்குப் பிறகு முகமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழுவும் மகாத்மா காந்தி தலைமையில் ஒரு குழுவும் சேர்ந்து பேசி சுமுக முடிவு ஏற்படும்போது எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர். எத்தனை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இது கமலுக்குத் தெரியுமா?

கமல் பேசியதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவர் இத்தாலி நாட்டுக்குதான் போக வேண்டும். இந்துக்களை அவமரியாதையாக பேசிவிட்டு அதை ஆதரித்துப் பேசுவது முட்டாள்தனம். என்னிடம் சில இஸ்லாமிய, கிறிஸ்தவத் தலைவர்கள் பேசினார்கள். என்னுடைய கருத்தை அவர்கள் வரவேற்றனர். இந்து மதத்தைப் பேசியதுபோல வேற ஏதாவது ஒரு மதத்தைப்பற்றி கமல்ஹாசன் இப்படிப் பேச முடியுமா? தி.மு.க தலைவர் ஸ்டாலின், தி.க தலைவர் வீரமணி, தி.மு.க-வில் சில பேச்சாளர்களின் வரிசையில் தற்போது கமலும் சேர்ந்து இருக்கிறார்.

எல்லா மதத்திலும் மத ஆர்வலர்கள் இருப்பார்கள். அவர்களைத் தூண்டிவிடும் வகையில் கமல்ஹாசன் பேசக்கூடாது. நாக்கை நான் அறுப்பேன் என்று கூறவில்லை. நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்றுதான் கூறினேன். சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, கலவரத்தைத் தூண்டிவிடும் வகையிலான அவரது பேச்சைதான் நான் கண்டித்தேன். யாருடைய  மனதும் புண்படும்படி பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. மக்களின் கோபங்கள் எப்படி வெளிப்படும் என்பதைத்தான் கூறியிருந்தேன். அவர் திருந்துவதற்காகதான் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தினேன். இந்துக்கள் வருத்தப்பட வேண்டாம் என்று அவர் மறுப்பு தெரிவித்தால், நானும் பேசியதை வாபஸ் பெறுகிறேன்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க