சமூக சேவகர் `515 கணேசன்'-க்கு புது வீடு - நேரடியாக வந்து நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ் | social worker ganeshan New House by Raghava Lawrence

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:08:20 (15/05/2019)

சமூக சேவகர் `515 கணேசன்'-க்கு புது வீடு - நேரடியாக வந்து நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கஜாவால், சேதமடைந்த சமூக சேவகர் `515 கணேசனி'ன் வீட்டைப் பார்த்து கவலையடைந்த ராகவா லாரன்ஸ், தன் சொந்தச் செலவில் புதிய வீட்டைக் கட்டிக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.

515 கணேசன்

கடந்த நவம்பரில் அடித்த கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே கலைத்துப் போட்டுவிட்டுப் போனது. பகுதியாகவும், முழுமையாகவும் பலரும் வீடுகளை இழந்து தவித்தனர். புயல் அடித்து 6 மாதங்களுக்குப் பிறகும்கூட இன்னும் சிலர் வீடுகளுக்கு ஒட்டு போட்டுதான் நாள்களைக் கழித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள் 50 பேருக்கு தன் சொந்த செலவில் புதிய வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்திருந்தார். அதன்படி, பயனாளிகளைத் தேர்வு செய்தவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகளைத் தொடங்கினார். டெல்டா பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழைக்குடும்பங்களின் வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தலா 10 லட்சம் ரூபாய் செலவில்  அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீடு


இதில், ஒரு பகுதியாகத்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் `515 கணேசன்'-க்கு வீடு கட்டும் பணியை நடிகர் ராகவா லாரன்ஸ் நேரடியாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தற்போது, கணேசனின் வீடு கட்டிமுடிக்கப்பட்டு, புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் வீட்டின் சாவியை சமூக சேவகர் கணேசனின் கையில் கொடுத்தார்.

ராகவா லாரன்ஸ்

மகிழ்ச்சியுடன் சாவியைப் பெற்றுக்கொண்ட கணேசனின் குடும்பத்தினர் ராகவா லாரன்ஸுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். மேலும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 50 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் வரையிலும் டெல்டா பகுதிகளில் தங்கியிருந்து அனைவருக்கும் புது வீட்டுக்கான சாவியை லாரன்ஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் போல, இலவச கார் சேவை செய்துவருபவர், ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன். இன்று நேற்றல்ல, கடந்த 47 வருடங்களாக இந்தச் சேவையை அவர் செய்துவருகிறார். ஆலங்குடி மட்டுமல்ல புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 515 கணேசனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை.