அதிகாலை 3 மணிக்கு வெடித்துச் சிதறிய ஏசி!- நிச்சயிக்கப்பட்ட மகனுடன் உயிரிழந்த அப்பா, அம்மா | three dead in tindivanam because of AC

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:51 (15/05/2019)

அதிகாலை 3 மணிக்கு வெடித்துச் சிதறிய ஏசி!- நிச்சயிக்கப்பட்ட மகனுடன் உயிரிழந்த அப்பா, அம்மா

தற்போது சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்துக்கு அவரவர் புதுப்புது ஏசிகளை வாங்கிச் செல்லும் நிலையில், திண்டிவனம் அருகே ஏசியின் மூலம் மூன்று பேர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

விபத்து

திண்டிவனத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள சுப்பராய பிள்ளை தெருவில் வசித்து வந்துள்ளனர் ஆர்.ராஜ் குடும்பத்தினர். ராஜு தனது மூத்த மகனான கோவர்த்தனனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது தன் இளைய மகனான கௌதமனுக்கு (30), வரும் ஜூன் 6-ம் தேதி அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. திருமணத்துக்கான அனைத்துப் பணிகளையும் முழுவீச்சில் செய்து வந்துள்ளனர் ராஜ் குடும்பத்தினர். நேற்று வழக்கம்போல் திருமண ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு அசதியில், இரவு ஏசியை ஆன் செய்துவிட்டு தன் மனைவி கலைச்செல்வி என்ற கலா(52) மற்றும் தன் இளைய மகன் கௌதமனுடன் ஒரே அறையில், அறையைப் பூட்டிவிட்டு உறங்கியுள்ளார் ராஜ். அதே வீட்டில் மற்றொரு அறையில் தன் மூத்த மகனும் அவரின் மனைவியும் உறங்கியுள்ளனர்.

விபத்து

அதிகாலை 3 மணியளவில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ராஜ், அவரின் மனைவி மற்றும் அவரின் மகன் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். வெடித்த சத்தம் கேட்டுப் பதறி ஓடி வந்த கோவர்த்தனன் மற்றும் அவரின் மனைவி, அக்கம் பக்கத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த திண்டிவனம் காவல் நிலைய காவலர்கள் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பலி

இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தின் எஸ்.ஐ. கே.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ``நாங்கள் தற்போது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். விபத்து குறித்து மேலும் விசாரித்து வருகிறோம். அதுமட்டுமின்றி பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பின்புதான் தெளிவாகக் கூற முடியும்" எனக் கூறினார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பத்தில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் ஏசி-யின் மூலம் இத்தகு சம்பவம் நடந்திருப்பது சுற்றுவட்டார மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.