``தேர்தல் முடிஞ்சதும் செய்யறோம்!" - வருடக்கணக்கில் கிடப்பில் உள்ள சுரங்கப்பாதை... பின்னணியில் அமைச்சரா? | Vaniyambadi Railway under bridge work finds no progress as the people blames Minister

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/05/2019)

கடைசி தொடர்பு:17:07 (15/05/2019)

``தேர்தல் முடிஞ்சதும் செய்யறோம்!" - வருடக்கணக்கில் கிடப்பில் உள்ள சுரங்கப்பாதை... பின்னணியில் அமைச்சரா?

``தேர்தல் முடிஞ்சதும் செய்யறோம்!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி...தோல் தொழிற்சாலைகள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் நகரம். இந்த நகரத்தை பழைய வாணியம்பாடி, புதிய வாணியம்பாடி (நியூ டவுன்) என இரண்டாகப் பிரிப்பது சென்னை - பெங்களுரூ தேசிய நாற்கரச் சாலை ஆகும். பழைய வாணியம்பாடி பகுதியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், காவல்நிலையம், அரசு மருத்துவமனை அமைந்துள்ளன. புதிய வாணியம்பாடியில் நகராட்சி அலுவலகம் தொடங்கி பல்வேறு கல்லூரிகளும், அரசுப் பள்ளிகளும் உள்ளன.

நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் புதிய வாணியம்பாடிக்குச் செல்லும் சாலையில் ஒரு ரயில்வே கேட் (LC 81) உள்ளது. ரயில்கள் அடிக்கடி இந்த வழித்தடத்தில் போகும் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இந்த கேட் மூடப்பட்டே இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். மக்களின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அன்று வேலைகள் தொடங்கப்பட்டன.

அதன்பிறகு அந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனால், அதன் பிறகான பணிகள் எதுவுமே நடக்காததால் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக பழைய வாணியம்பாடியிலிருந்து புதிய வாணியம்பாடி செல்ல பொதுமக்கள் சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம்வரை சுற்றியே செல்லவேண்டியதாக இருந்தது.

வாணியம்பாடி- சுரங்கப்பாதைக்கு காத்திருக்கும் வாகனங்கள்

அதையடுத்து சமூக ஆர்வலர் மதுரை பாரூக் அஹமத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் மூடப்பட்டதால் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் பணிகள் நடைபெறாதது குறித்து புகாராக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் மூடப்பட்ட கேட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கக்கோரி கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வழக்கு கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதியன்று (23.11.2018) விசாரணைக்கு வந்தபோது, ரயில்வே துறை சார்பில் சரியான விளக்கம் தராததால், பாரூக் அஹமத் கோரிக்கையை ஏற்று, பொதுமக்கள் அதிகளவு பாதிப்புக்குள்ளாவதன் காரணமாகத் தற்காலிகப் பயன்பாட்டிற்காக ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கக் கோரி ரயில்வே துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து மூடப்பட்ட நியூடவுன் ரயில்வே கேட், இலகுரக வாகனங்களான கார், ஆட்டோ, பைக் மற்றும் ஆம்புலன்ஸ் மட்டும் சென்று வரக் கூடிய வகையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. ஆனாலும் தற்காலிகமாக கேட் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கெனவே கிடப்பில் இருக்கும் சுரங்கப்பாதை பணிகள் என்னவாகும் என்கிற கேள்வி மக்களிடம் தொடர்ந்து நீடிக்கிறது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``சுரங்கப்பாதை என்பது எங்களுடைய பகுதிக்குக் கண்டிப்பாகத் தேவை. ஒரு நாளைக்கு ரயில்வே கேட்டை 100 முறைக்கு மேல் திறந்து மூடுகின்றனர். இதனால் நாங்கள் அவதிப்படுவது மட்டுமன்றி, உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெளியூரிலிருந்து வரும் பயணிகள், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச் சாலைகளிலேயே இறக்கிவிடப்படுகின்றனர். இதனால் நகரப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்று ஆட்டோக்காரர்களை அணுகினால் அதிகக் கட்டணத்தை அவர்கள் கேட்கிறார்கள். அதுவே இரவு நேரம் என்றால், மூன்று மடங்கு கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை நகராட்சி ஆணையர் மற்றும் அமைச்சரிடம் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை, அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தினை உடைய வாணியம்பாடியில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” என்று புலம்பினர்.

வாணியம்பாடி - ரயில்வே சுரங்கப்பாதை

சமூக ஆர்வலர் பாரூக் அஹமதுவிடம் பேசினோம். ``முதலில் சுரங்கப்பாதை பணியைத் தொடங்குவதற்கு முன் அதற்கான நிலம் கையகப்படுத்தவேண்டும். ஆனால், அதற்கான பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. வேலையையும் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரிடம் கேட்டாலும் மற்ற துறையினரைக் காரணம்காட்டுகின்றனர். இந்தச் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 16 கோடி ரூபாய் என்ன ஆனது எனத் தெரியவில்லை. நீதிமன்ற விசாரணையில் 'சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு அருகே நீர்வழிப்பாதை (30 அடி அகலத்தில்) உள்ள காரணத்தினால் சுரங்கப்பாதை அமைப்பதில் சிக்கல் உள்ளது' என ரயில்வே துறை சார்பில் காரணம்சொல்லப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றம், `ஆறு மாதத்திற்குள் சுரங்கப்பாதை அமைக்க நிர்ணயம் செய்யப்பட்ட இடத்தில் நீர்வழிப்பாதையினால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா, ஏற்படாதா என்பதை நகராட்சி சோதனை செய்து பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிரச்னைக்கு மறைமுகக் காரணமாக இருந்து வருவது, தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபஃர் கபில்தான் என்று சொல்லப்படுகிறது. சுரங்கப்பாதை அமைத்தால் சில தனியார் ஹோட்டல்கள் அமைந்துள்ள இடங்கள் கையகப்படுத்தப்படும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்தப் பணி நிலுவையில் உள்ளது" என்றார்.

வாணியம்பாடி ரயில்வே கூடுதல் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளரிடம் இதுதொடர்பாக சரியான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை. அமைச்சர் நிலோபஃர் கபிலைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``சுரங்கப்பாதை அமைக்கப்படாததுக்கு ஒப்பந்ததாரர் மட்டுமே முழுக்க முழுக்கக் காரணம். அவர் ஏற்கெனவே கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிந்ததும் முதலமைச்சரிடம் இதுதொடர்பாகப் பேச இருக்கிறேன். அந்தச் சுரங்கப்பாதை எங்கள் நகரத்துக்கு மிகமிகத் தேவையான ஒன்று” என்று விளக்கமளித்தார்.

தேர்தலுக்குப் பிறகாவது வாணியம்பாடி மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்.


டிரெண்டிங் @ விகடன்