கையொப்பமிட்டுவந்த நண்பர், வாலிபருக்கு வெட்டு!- போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகில் நடந்த பயங்கரம் | Attempt to murder near commissioner office

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (15/05/2019)

கடைசி தொடர்பு:12:00 (15/05/2019)

கையொப்பமிட்டுவந்த நண்பர், வாலிபருக்கு வெட்டு!- போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகில் நடந்த பயங்கரம்

கோவையில் அரிவாள் வெட்டப்பட்ட வாலிபர்

கோவையில் பட்டப்பகலில் அதுவும் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு அருகிலேயே இரண்டு இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் கோவை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

கோவை கணபதியை அடுத்த பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரதீப். தன் மீதுள்ள அடிதடி வழக்கிற்காகக் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று காலை நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதற்காக கோவை நீதிமன்றத்திற்குத் தனது நண்பர் தமிழ்வாணனுடன் வந்துள்ளார் பிரதீப். நீதிமன்றத்தில் கையொப்பமிட்டுவிட்டு, இருவரும்  கோவை போலீஸ் கமிஷனர் ஆபீஸைக் கடந்து உப்பிலிபாளையம் சிக்னலை நோக்கிச் சென்றனர்.  

அவர்கள் சி.எஸ்.ஐ தேவாலயத்தைக் கடக்கும்போது இரண்டு பைக்குகளில் பின்தொடர்ந்து சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளை வீசத்தொடங்கியது. அதில் நிலைதடுமாறிய பிரதீப்பும், தமிழ்வாணனும் கீழே விழ, அந்தக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றது. இந்த அரிவாள் வெட்டில் ஒருவருக்கு வயிற்றிலும் நெஞ்சுப் பகுதியிலும், இன்னொருவருக்குக் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் பீறிடும் நிலையில் துடிதுடித்தார்கள். 

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த `ரேஸ்கோர்ஸ்' போலீஸார், ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக  சதீஷ், ஹரி, தனபால், சூர்யா ஆகிய நான்குபேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

அமைதியான நகரமாக அறியப்படும் கோவையில் பாலியல் சம்பவங்களும், கொலைக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பட்டப்பகலில் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு அருகிலேயே நடந்த அரிவாள் வெட்டு சம்பவம் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க