`கன்னம் கிழிந்தது, தலை, காது, முதுகில் காயம்!' - தி.மு.க பிரமுகரால் முதியவருக்கு நடந்த சோகம் | FIR filed against dmk cadre

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:57 (21/05/2019)

`கன்னம் கிழிந்தது, தலை, காது, முதுகில் காயம்!' - தி.மு.க பிரமுகரால் முதியவருக்கு நடந்த சோகம்

சென்னையில் முதியவர் ஒருவர் மீது தி.மு.க பிரமுகர் மற்றும் அவரின் மனைவி, உள்ளிட்டோர் சரமாரி தாக்குதல் நடத்தும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு சுகந்திரா நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தி.மு.க-வின் ஆயிரம் விளக்கு கழக அமைப்பாளராக  உள்ளார். இவர் மனைவி செல்வி. உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு  போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்தவர். இவர்கள் அப்பகுதியில் காரை நகர்த்தச் சொன்ன முதியவர் மீது சரமாரியாக தாக்குல் நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட முதியவரின் மகன் பிரான்சிஸ் கூறுகையில் ``சுகந்திரா நகரில் வெற்றிச்செல்வி மற்றும் அவரின் கணவன் மாணிக்கத்தின் ஆதிக்கம்தான். அவர்களை எதிர்த்து யாரும் பேசிவிடக்கூடாது என நினைக்கிறார்கள். நேற்று என் தகப்பனார் கேப்ரில். அவருக்கு வயது 68. வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.

தாக்குதல்

அப்போது, ஏரியாவில் மாணிக்கத்தின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. `தண்ணீர் லாரி வருது, காரை நகர்த்துங்க’ என்று கேப்ரியல் கூற, உடனே `என்னய சொல்ற அளவுக்கு உனக்குத் தைரியமா?’ என்று மோசமான வார்த்தையை கூறி திட்டியுள்ளனர். பதிலுக்கு அவரும் திட்ட, முதியவர் மீது சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர்கள், மரப்பலகையை வைத்து அடித்துள்ளனர். உடனே அவரது மனைவி வெற்றிச்செல்வி, மகன்கள் அங்கே கூடிவிட, எல்லோரும் சேர்ந்து என் தந்தையை தாக்கத் தொடங்கிவிட்டனர்” என்கிறார். 

 

 

 

தொடர்ந்து பேசும் அவர், ``இதில் அவருக்கு முகத்தில் கன்னம் கிழிந்து ரத்தம் வந்துவிட்டது. தலை, காது, முதுகுப் பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். நிலைகுழைந்து போன அவர், அங்கேயே விழுந்துவிட்டார். இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்த, அந்த ஏரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதை வெளியில் தெரியப்படுத்தும் நோக்கத்தோடு வீடியோ எடுத்த பெண், `உங்களுக்காகத்தான் வீடியோ எடுத்தேன். இப்போ என்னால வெளியேகூட வர முடியல’ என்று பயப்படுகிறார். தந்தையை தாக்கியதோடு மட்டுமல்லாமல், காவல்நிலையத்துக்குச் சென்று எங்கள் மீதே அவர்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட என் அப்பாவை அழைத்துக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். பிறகு என்ன நடந்தது எனக் கூறி அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்.

 

ஆனால், மாணிக்கம் உள்ளிட்டோர், ஏரியாவில் கார் எடுத்துக்கொண்டு வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை காவல்துறை தரப்பில் எடுக்கவில்லை. மாணிக்கத்தின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. குண்டாஸ் சட்டத்திலிருந்து வெளியே வந்தவர். ஏரியாவில் அவர்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. இதுபோல பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எங்களுக்குப் பாதுகாப்பேயில்லை” என்கிறார். 

எப்ஐஆர்

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``முதியவர் கேப்ரியல் இருசக்கர வாகனம் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு, வண்டியை எடுக்கச்சொல்லி திட்டுகிறார். வண்டியிலிருந்து யாரும் இறங்காததால், வின்டோ அருகில் சென்று திட்டுகிறார். இது இருவருக்கும் இடையே மோதலாக வெடிக்கிறது. உடனே செல்வி இறங்கி வந்து அவரை அடிக்கிறார். தொடர்ந்து ஆனந்தன் என்பவர் மரப்பலகையால் முதியவரைத் தாக்குகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யபட்டுள்ளது. முதியவருடைய மகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றனர்.  கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது