`பின்னால் தோழி, மின்னல் வேகத்தில் சென்ற பைக்!' - சென்னை நீச்சல் வீரரின் உயிரைப்பறித்த விபத்து | Accident near chennai swimmer dead

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:45 (15/05/2019)

`பின்னால் தோழி, மின்னல் வேகத்தில் சென்ற பைக்!' - சென்னை நீச்சல் வீரரின் உயிரைப்பறித்த விபத்து

நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன்

சென்னை அரும்பாக்கம் அருகே பைக்கில் சென்ற தங்கம் வென்ற நீச்சல் வீரர் விபத்தில் சிக்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அரும்பாக்கம் அடுத்த செனாய் நகரைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரின் மகன் பாலகிருஷ்ணன் (29), நீச்சல் வீரரான இவர் கடந்த 2010-ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். தற்போது அமெரிக்காவில் பணியாற்றிவந்தார். 

 சில தினங்களுக்கு முன், சென்னை வந்தார். நேற்றிரவு தனது உறவினரைப் பார்த்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் அருகே பைக்கில் வீடு திரும்பினார். அப்போது பைக்குக்கு முன்னால் லாரி சென்றது. அதை முந்திச் செல்ல பாலகிருஷ்ணன் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறினார். இதில் லாரியின் சக்கரத்தில் பாலகிருஷ்ணன் சிக்கிக்கொண்டார். சக்கரம் ஏறி இறங்கியதில் பாலகிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

 ஜெயலலிதாவுடன் நீச்சல் வீரர்

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பாலகிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் லாரி டிரைவர் சுப்பிரமணியை கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பாலகிருஷ்ணன் தோழியுடன் பைக்கில் வந்துள்ளார். அவர் ஓட்டி வந்தது ஹைஸ்பீடு ரேஸர் பைக் வகையைச் சார்ந்தது. அந்தப் பைக்கில் சர்வசாதாரணமாக 60 கி.மீ வேகத்திலிருந்து 100 கி.மீட்டர் வரை செல்லலாம். பாலகிருஷ்ணனும் அதிவேகத்தில் பைக்கை ஓட்டியபடி லாரியை முந்திச் சென்றிருக்கலாம். அப்போதுதான் நிலைத்தடுமாறி லாரியின் சக்கரத்தில் அவர் சிக்கியுள்ளார்.

பாலகிருஷ்ணன்

ஆனால், அவரின் பின்னால் அமர்ந்திருந்த தோழி, எதிர்திசையில் விழுந்ததால் காயங்களுடன் தப்பிவிட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். கவனக்குறைவாக லாரியை ஓட்டி உயிர்பலி ஏற்படுத்தியதற்காக லாரி டிரைவரைக் கைது செய்துள்ளோம். விபத்தில் சிக்கிய பைக்கில் முன்பகுதி சேதமடைந்துள்ளது. 

பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில்தான் படித்தார். பிறகு இன்ஜினீயரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துவந்தார். சின்ன வயதிலிருந்தே அவருக்கு நீச்சலில் ஆர்வம் இருந்தது. நீச்சல் போட்டியில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. விடுமுறைக்காக ஊருக்கு வந்த நேரத்தில் விபத்தில் சிக்கி அவர் பலியாகியுள்ளார்" என்றனர்.