`82 கி.மீ தூரம்... 3.40 மணி நேரம்..!'- சைக்கிளிங்கில் உலக சாதனை படைத்த 7 வயது தமிழகச் சிறுவன் | coimbatore boy achieves a record in cycling

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:00 (15/05/2019)

`82 கி.மீ தூரம்... 3.40 மணி நேரம்..!'- சைக்கிளிங்கில் உலக சாதனை படைத்த 7 வயது தமிழகச் சிறுவன்

மூன்று வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்து, அவர்கள் தட்டுத் தடுமாறி சைக்கிள் ஓட்டும் அழகை எல்லாப் பெற்றோர்களுமே ரசித்திருப்பார்கள். அப்படிச் சாதாரணமாக சைக்கிள் பழகக் கற்றுக்கொண்ட அபினவ் என்ற சிறுவன், தன்னுடைய ஏழு வயதில் சைக்கிளிங்கில் உலக சாதனை புரிந்துள்ளார். இது குறித்து அபினவ்விடம் பேசினோம்.

சிறுவன்

 

``எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போ எனக்கு 7 வயசு ஆகுது. என்னுடைய மூணு வயசில் நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சேன். தினமும் ஸ்கூல் முடிச்சு வந்து அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டுவேன். என்னுடைய ஐந்து வயதில் சைக்கிள் மூலம் சாதனை படைக்கிற எண்ணம் வந்துச்சு. ஆரம்பத்தில் 1000 பேருடன் சேர்ந்து சைக்கிளிங் செய்து கின்னஸ் ரெக்கார்டு பண்ணினேன். அப்பதான் தனியாகச் சாதனை செய்யணும்ங்கிற ஆசை வந்துச்சு. அதனால் தினமும் சைக்கிள் ஓட்டும் நேரத்தையும் தூரத்தையும் அதிகரிச்சேன். கடந்த ஒரு வருஷமாக தினமும் 20 கிலோ மீட்டர் பயணத்தை இலக்காக எடுத்துக்கிட்டேன்.

சைக்கிளிங் செய்யுறவங்களுக்கு மூச்சுப் பயிற்சி, கவனம், சரியான உணவு முறை எல்லாமே முக்கியம். அதில் எல்லாம் ட்ரெயின் ஆன பின்தான் உலக சாதனைக்குப் பயிற்சி மேற்கொள்ள ஆரம்பிச்சேன். பாண்டிச்சேரி டு மாமல்லபுரம் வரை 82 கி.மீ தூரத்தை 4 மணிநேரத்திற்குள் கடக்க திட்டமிட்டு ட்ரெயினிங்கும் எடுத்துகிட்டேன். சில மாத பயிற்சிகளுக்குப் பின் கடந்த வாரம் பாண்டிச்சேரியில் காலை 4.30 மணிக்குக் கிளம்பி காலை 8.20 மணிக்கு மாமல்லபுரத்தை அடைந்தேன். 82 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணிநேரம் 40 நிமிடத்தில் கடந்து " ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்"சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளேன். அடுத்தபடியாக கின்னஸ் சாதனைக்கும் பயிற்சிகள் எடுத்து வருகிறேன். இன்னும் ஓராண்டுக்குள் கின்னஸ் கனவும் நிறைவேறும்" என்கிறார் அபினவ்.