``ஸ்டால், தங்குமிடம், சந்தை.. எல்லாம், பெண்களுக்கு மட்டுமே!'' - இயற்கை ஆர்வலர் மேனகாவின் பிளான் | if my experiment will succeed, plan to do as monthly project says menaka

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/05/2019)

கடைசி தொடர்பு:14:30 (15/05/2019)

``ஸ்டால், தங்குமிடம், சந்தை.. எல்லாம், பெண்களுக்கு மட்டுமே!'' - இயற்கை ஆர்வலர் மேனகாவின் பிளான்

மேனகா

சென்னையைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலரான மேனகா, இயற்கை விவசாயத்தைப் பிரபலப்படுத்த ஆண்டுதோறும் புதிய முயற்சிகளைச் செய்துவருவார். `மண்வாசனை மகளிர் வேளாண் சந்தை' என்ற பெயரில் இயற்கை விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்புக்குக் களம் அமைத்துக்கொடுக்கவுள்ளார். இதுகுறித்து மேனகாவிடம் பேசினோம். 

``இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரிச்சுகிட்டு வருது. பலரும் இயற்கை விவசாயம் செய்ய முன்வந்தாலும், சந்தை வாய்ப்பில்தான் சிரமங்கள் ஏற்படுது. அதனால இயற்கை விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காம நிறைய விவசாயிகள் சிரமப்படுறாங்க. எனவே, சந்தை வாய்ப்புக்குச் சரியான களமும், வாடிக்கையாளர்களும் கிடைச்சா, இயற்கை விவசாயிகளுக்கு வெற்றி கிடைக்கும். அதில் முதல் கட்டமா பெண் இயற்கை விவசாயிகளுக்கு உதவும் வகையில, விற்பனை வாய்ப்புக்காக, `மண்வாசனை மகளிர் வேளாண் சந்தை' யை நடத்த ஏற்பாடு செய்திருக்கேன். 

மேனகா

மகளிர் சுயஉதவிக்குழுவினர், இயற்கை விவசாயிகள், இயற்கை அங்காடியினர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில ஸ்டால் போடலாம். ஆனா, அவங்க எல்லோரும் பெண்களா இருக்கணும். ஸ்டால் போடும் வெளியூர் பெண்களுக்குத் தங்குமிடமும் ஏற்பாடு செய்துகொடுக்கிறேன். பார்வையாளராக முப்பாலரும் கலந்துகிட்டு, தங்களுக்குத் தேவையான இயற்கை விளைபொருள்களை வாங்கலாம். இந்நிகழ்ச்சியின் தொடக்கநாள் நிகழ்வுல `மண்புழு விஞ்ஞானி' சுல்தான் இஸ்மாயில், மதுமதி ஐ.ஏ.எஸ், வி.ஜி.பி சந்தோசம் ஐயா உட்பட பலர் விருந்தினராகக் கலந்துக்கிறாங்க. ஆயிரக்கணக்கான இயற்கை ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில கலந்துப்பாங்கனு நினைக்கிறேன். வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை முதல் மாலை வரை இந்நிகழ்ச்சி நடக்கும். அனுமதி இலவசம்தான். இந்த முயற்சி வெற்றி பெற்றால், மாதந்தோறும் `மண்வாசனை மகளிர் வேளாண் சந்தை'யை நடத்தலாம்னு திட்டமிட்டிருக்கேன்" என்று உற்சாகமாகக் கூறுகிறார், மேனகா