`குட்டிகள் உயிரோடு இருக்கிறது; தாய், 10 குரங்குகள் இறந்துக் கிடக்கிறது!'- நீலகிரி அதிர்ச்சி | over 10 monkeys spotted dead near Kothagiri

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (15/05/2019)

கடைசி தொடர்பு:15:05 (15/05/2019)

`குட்டிகள் உயிரோடு இருக்கிறது; தாய், 10 குரங்குகள் இறந்துக் கிடக்கிறது!'- நீலகிரி அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் குரங்குகள் கூட்டமாக இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனப் பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, காட்டு மாடு போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக குரங்குகள் காடுகளைவிட்டு வெளியேறி பல ஆண்டுகளாக சாலையோரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அளிக்கும் உணவுகளைச் சாப்பிட்டு வருகின்றன. மனிதர்கள் வழங்கும் உணவுக்காக கையேந்தி காத்துக்கிடக்கின்றன. 

விஷ சாப்பாடு கலந்த உணவு சாப்பிட்டு இறந்த குரங்கு

மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. இந்த நிலையில், கோத்தகிரியை அடுத்துள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் கூட்டமாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உயிரிழந்த குரங்கு

பிறந்து சில தினங்களே ஆன பால் குடிக்கும் குட்டிகளைத் தவிர தாய் மற்றும் சினைக்குரங்குகள் இறந்து கிடந்தன. உடனடியாக இறந்த குரங்குகளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். நஞ்சு கலந்த உணவைத் தின்று குரங்குகள் இறந்திருக்ககூடும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ``விஷம் கலந்த உணவை குரங்குகள் சாப்பிட்டு உயிரிழந்திருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று முடித்துக்கொண்டனர்.