`நாங்கள் காசாளர்கள் இல்லை... ஆகச்சிறந்த கருத்தாளர்கள்!' - சீமான் பேச்சு | seeman election campaign in Aravakurichi

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (15/05/2019)

கடைசி தொடர்பு:15:35 (15/05/2019)

`நாங்கள் காசாளர்கள் இல்லை... ஆகச்சிறந்த கருத்தாளர்கள்!' - சீமான் பேச்சு

சீமான் பொதுக்கூட்டம் 

`அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளருக்கு, எனக்காக வாக்களிக்க வேண்டாம், நமக்காக வாக்களியுங்கள்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரும் 19- ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி, அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் கடைவீதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். விவசாய சின்னத்துக்கு வாக்கு கேட்டு உரையாற்றினார்.

சீமான் பேசியபோது...

அப்போது பேசிய அவர், ``அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளருக்கு எனக்காக வாக்களிக்க வேண்டாம், நமக்காக வாக்களியுங்கள். அதேபோல, உங்களுக்காக வாக்களிக்க வேண்டாம், உங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்காக வாக்களியுங்கள். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற மண்ணின் வளங்களை எடுப்பது, உடலிலுள்ள பாகங்களை தனித்தனியே எடுப்பதற்குச் சமம். கிட்டத்தட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒரு ஐந்து ஆண்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பளியுங்கள். சிறந்த தேசமாக மாற்றுவதற்கு கனவு காண்கிற பிள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம். 

சீமான் பேசியபோது....

கோடி கனவுகளை என்று கூறவும், அதைக் கூடி நிறைவேற்றுவதற்கு நீங்கள் அனைவரும் வாருங்கள் எனக் கைகூப்பி களத்தில் நிற்கிறோம். உங்களுக்கு ஓட்டுக்கு காசு அளிக்க எங்களால் முடியாது. ஆனால், உயர்ந்த வாக்குறுதிகளை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் காசாளர்கள் இல்லை. ஆகச்சிறந்த கருத்தாளர்கள். நாங்கள் கோடிகளைக் கொட்டி, இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. உயர்ந்த கொள்கைகளை நிறுத்தி தேர்தலில் நிற்கிறோம். நாங்கள் கேட்பது ஓட்டல்ல, மக்களின் உரிமை. நாங்கள் வாக்குக் கேட்கவில்லை. எதிர்கால மக்களின் வாழ்க்கையைக் கேட்கிறோம். அதை தருவதும் தராததும் உங்கள் விருப்பம். நான் தோல்வி அடைந்தால், அது என்னுடைய தோல்வியல்ல, மக்களின் தோல்வி. அதுபோல, என் வெற்றி என்பது என் வெற்றியல்ல, என் மக்களின் வெற்றி. இதை புரிந்துகொண்டு, அரவக்குறிச்சி சட்டமன்ற வாக்காளர்கள் விவசாயி சின்னத்தில் வாக்களித்து, செல்வம் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.