கோவையில் மறைக்கப்பட்டது கருணாநிதி கல்வெட்டு! - கண்டுகொள்ளாத தி.மு.க சீனியர்கள் | Karunanidhi's name hidden in Coimbatore flyover

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (15/05/2019)

கடைசி தொடர்பு:16:05 (15/05/2019)

கோவையில் மறைக்கப்பட்டது கருணாநிதி கல்வெட்டு! - கண்டுகொள்ளாத தி.மு.க சீனியர்கள்

கோவை அவினாசி சாலையை இணைக்கும் மேம்பாலத்தில், கருணாநிதி பெயர் இருந்த கல்வெட்டில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது.

கோவையில் வெள்ளையடித்து மறைக்கப்பட்ட கருணாநிதி கல்வெட்டு

கோவை, அவினாசி சாலை, ப்ரூக் பாண்ட் சாலை, கூட்ஷெட் சாலை, மரக்கடை ஆகிய பகுதிகளை இணைக்கும் மேம்பாலம், கடந்த 1974-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதிதான், மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். இதுதொடர்பான கல்வெட்டும் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து வந்தது. அண்மையில், மேம்பாலத்துக்கு வெள்ளையடிக்கும் பணிகள் நடந்து வந்தன.

அப்போது, கருணாநிதி பெயர் இருந்த கல்வெட்டில் மட்டும் வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அருகில் பொறியாளர்களின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு அப்படியேதான் இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால், தலைவர்கள் சிலையை மூடிவைப்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, `இதுவும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகச் செய்யப்பட்டுள்ளதா?' என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவையில் மறைக்கப்பட்ட  கருணாநிதி கல்வெட்டு

ஆனால், கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை அந்தக் கல்வெட்டு வெள்ளை அடிக்கப்படாமல்தான் இருந்தது. எனவே, வெள்ளை அடிக்கும் போது, தெரிந்தோ, தெரியாமலோதான் கருணாநிதி பெயர் உள்ள கல்வெட்டுக்கு வெள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் பலருக்குத் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.