`ரவுடியிசம் செய்து வந்த மக்னா யானை பெட்டிப் பாம்பாய் மாறியது எப்படி?' குட்டி பிளாஷ்பேக் #MyVikatan | From rogue killer to kumki Moorthy elephant journey

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (15/05/2019)

கடைசி தொடர்பு:19:29 (16/05/2019)

`ரவுடியிசம் செய்து வந்த மக்னா யானை பெட்டிப் பாம்பாய் மாறியது எப்படி?' குட்டி பிளாஷ்பேக் #MyVikatan

மக்னா 1998-ம் ஆண்டு தென்னிந்தியாவில் அதிகம் பேசப்பட்ட வார்த்தை இது. கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மக்னா (தந்தம் இல்லாத யானை) ஒன்று தொடர்ச்சியாக மனிதர்களைக் கொன்று வந்தது.

மூர்த்தி யானை

6 டன் எடையுள்ள ஒரு காட்டு யானை மூன்று மாநிலங்களை அலறவிட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லைப் பகுதிகளில் உலவி 21 பேரைக் கொன்றது. என்ன செய்தாலும் கட்டுப்படுத்த முடியாத முரட்டு மக்னாவை ஒருகட்டத்தில் சுட்டுக் கொல்ல கேரளா வனத்துறை முடிவு செய்து உத்தரவும் பிறப்பித்தது. ஆனால், போக்குக் காண்பித்து தமிழக வனத்துக்குள் வனப்பகுதிக்குள் வந்த மக்னாவை உயிருடன் பிடிக்கும் சவாலான முடிவை எடுத்தது தமிழக வனத்துறை.

மனிதர்களைக் கண்டாலே துரத்தித் தூக்கிவீசும் முரட்டு யானையை இரண்டு கும்கி யானைகளுடன் காட்டுக்குள் சென்று நடவடிக்கைகள் மற்றும் குணாதிசியங்களைக் கண்டறிந்தார் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்துக்குட்பட்ட புலியம்பாறை பகுதியில் வலம் வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி 6 கும்கி யானைகள் உதவியுடன் மக்னா பிடிக்கப்பட்டு இரும்பு சங்கிலியில் பிணைத்து 11 கி.மீ தொலைவில் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு நடக்க வைத்துக் கொண்டுவந்தார். மிக மூர்க்கமானதாகக் கருதப்பட்ட மக்னா அருகில் சென்று பார்த்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கு பேரதிர்ச்சியாக இருந்தது, காரணம் உடலில் 37 இடங்களில் குண்டுதுளைத்த காயங்கள் சீழ் வைத்துப் புழுத்துப்போன நிலையில் இருந்தது. 

மூர்த்தி யானை

தந்தம் இல்லாத ஆண் யானைகளுக்குத் தும்பிக்கையே பெரும் பலம். ஆனால், இந்த யானைக்குத் தும்பிக்கையில் வெட்டுக்காயங்களும், குண்டடி காயங்களும் காணப்பட்டன. வனக் கால்நடை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியை முழுமையாக நம்பிய ஆட்கொல்லி மக்னா ஒரு கட்டத்தில் மயக்க மருந்து செலுத்தாத நிலையிலும் உடலில் இருந்த ரவை குண்டுகளை வெட்டி எடுக்க ஒத்துழைப்பு தந்தது.  லட்சக்கணக்கில் பணம் செலவழித்து தீவிர சிகிச்சை அளித்து மறுவாழ்வு தந்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி பெயரே யானைக்கும் சூட்டி தற்போது மூர்த்தி என அழைக்கப்படுகிறது.

மூர்த்தி யானை

அடல்ட் ஏஜ் எனப்படும் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்றைப் பிடித்து கும்கியாகப் பழக்கியது தென்னிந்தியாவில் இதுவே முதல்முறையாகும். ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் மக்னா உடலில் பெல்லட்டின் குண்டுகள் உள்ளன. தற்போது 56 வயதாகும் மூர்த்தி யானையின் மனதில் சில மனிதர்கள் தந்த கசப்பான நினைவுகள் காயங்கள் இருந்தபோதும், யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பாகன் கிருமாறன் போன்றின் அன்புக்கு அடிமையாகி முகாமின் செல்லப்பிள்ளையாக மற்ற வளர்ப்பு யானைகளுடனும் மனிதர்களுடனும் நட்புடன் பழகி வருகிறது.