நம்பரில் சிக்கிய போலீஸ் ஐ.ஜி; விஸ்வரூபம் எடுத்த மதிப்பெண் விவகாரம் - பரிசாக வந்த பணியிட மாற்றம் | Police IG Senthamarai kannan transferred

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (15/05/2019)

கடைசி தொடர்பு:18:30 (15/05/2019)

நம்பரில் சிக்கிய போலீஸ் ஐ.ஜி; விஸ்வரூபம் எடுத்த மதிப்பெண் விவகாரம் - பரிசாக வந்த பணியிட மாற்றம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செந்தாமரைக்கண்ணன்


போலி பேராசிரியரிடம் அறிக்கை பெற்ற விவகாரத்தில் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தனக்கு உரிய மதிப்பெண் வழங்கக் கோரி தலைமைக் காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில்தான் போலி பேராசிரியர் விவகாரம் வெளிவந்தது. கணிதம் தேர்வில் தான் எழுதிய சரியான விடைக்கு உரிய மதிப்பெண் வழங்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணையின் போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜரானார். கணிதம் தொடர்பான கேள்விக்கு மனுதாரர் 5 என்ற சரியான விடைக்குப் பதிலாக 1 எனத் தவறாக பதிலளித்துள்ளதாகக் கூறினார். இதைக்கேட்ட நீதிபதி, ஐஐடி பேராசிரியரிடம் இதுதொடர்பாக அறிக்கை பெற்று தாக்கல் செய்யுமாறு தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்றதாகவும் அவரும் 5 தான் சரியான விடை என்றார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் பெற்ற ஒரு தகவலின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதுபோல் அப்படி ஒரு பேராசிரியர் சென்னை ஐஐடியின் கணிதப்பிரிவில் பணியாற்றவில்லை என்பதுதான் அந்தத் தகவல். இதனால் கோபமடைந்த நீதிபதி இது எப்படி நடந்தது என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். 

இந்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளன என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும் சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் அளித்த கடித்தத்தைச் சமர்ப்பித்தார். அதில் `இந்த விவகாரம் தொடர்பாக சென்னைக் காவல் ஆணையரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தை ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மேலும் கோபமடைந்த நீதிபதி, எதற்காகப் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜி.வி.குமார், டி.மூர்த்தி இவர்கள் யார். இதுதொடர்பாக ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டார்.

அதில் உளவியல் நிபுணரான ஜி.வி.குமார் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். இவர்தான் டி.மூர்த்தி ஐஐடி கணிதப் பேராசிரியர் என அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரிடமிருந்துதான் அறிக்கை பெற்று தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் முறைகேடு செய்தது தெரியவந்ததையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

டி.மூர்த்தி கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஐஐடி பேராசிரியரிடம் அறிக்கை  பெறாமல் பள்ளி ஆசிரியரிடம் அறிக்கை பெற்று சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்து தமிழக உள்துறைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.