`மதச்செருக்கு, சாதிச்செருக்கு நிற்காது!’ - விமர்சனத்துக்கு கமல் பதில் | i told historical truth says kamal

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:17 (16/05/2019)

`மதச்செருக்கு, சாதிச்செருக்கு நிற்காது!’ - விமர்சனத்துக்கு கமல் பதில்

``நான் பேசியது சரித்திர உண்மை. சரித்திர உண்மையைப் பேசும்போது காயம் ஆறாது. உண்மை கசக்கத்தான் செய்யும்” என்று கமல் பிரசாரத்தில் பேசியுள்ளார். 

கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பேசுகையில், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என்னுடைய பேச்சை முழுவதுமாகக் கேட்காமல் அதன் நுனியைக் கத்தரித்துப்போட்ட ஊடகத் தோழர்கள், என் மேல் என்ன குற்றம்சாட்டுகிறார்களோ அதற்கு அவர்களும் தகுதியானவர்கள். நான் ஒருமுறைதான் சொன்னேன். வாலையும் தலையையும் வெட்டி 200 தடவை போட்டுவிட்டனர். ஐ.பி.சி பிரிவுகள் ஊடகத் தோழர்களுக்கும் பொருந்தும்.

பிரசாரம்

நான் சொல்லுகிறேன், `ஏன்யா குற்றம் சாட்றதும் சாட்றீங்க அத நம்புற மாதிரி சொல்ல வேணாமா. நான் தேர்தல் அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, ஒரு இனம் போதுமா. இல்லை பெரும்பான்மை மட்டும் போதுமா. அப்படிப் பெரும்பான்மையை நோக்கிப் போய்விட்டால் நீதி அடிபட்டுப்போகும். என் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். என் வீட்டில் இருப்பவர்கள் இந்துக்கள்தான் அவர்கள் மனம் புண்படும்படி பேசமாட்டேன். உண்மை கசக்கத்தான் செய்யும். அவர்கள் எந்த இனமாக இருந்தாலும், எந்தச் சாதியாக இருந்தாலும், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

கமலஹாசன்

 

நான் என்னைத் தலைவனாகப் பார்த்துக்கொண்டதேயில்லை. இன்னைக்குப் பேசும் மதச்செருக்கு, சாதிச்செருக்கு நிற்காது. உண்மையே வெல்லும். அதில் ஒன்றுதான் நான் கூறிய வரலாற்று உண்மை. தீவிர அரசியலில் நான் இறங்கியிருக்கிறேன். தீவிரவாதி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.நான் நினைத்திருந்தால், பயங்கரவாதி என்று சொல்லியிருக்கலாம். நான் பேசுவதில் வன்முறை இல்லை. சாதியைப் பிரிக்காதீர்கள், பிரிச்சுப் பிரிச்சு நிறைய பட்டுவிட்டோம். நான் படம் எடுத்துப் பார்த்தேன் பயனில்லை. என்னை அவமானப்படுத்த என் கொள்கைகளை கையிலெடுக்காதீர்கள், தோற்றுப்போவீர்கள். அது நேர்மையானது. மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. இந்த அரசு விழும், வீழ்த்துவோம். ஜனநாயகப்படி வீழ்த்துவோம்'' என்று பேசினார்.