`மழைக் கணிப்பில் தமிழக ஜோதிடர்கள்போல் வருமா?!’ - உயர் நீதிமன்றம் பெருமிதம் | Chennai Highcourt Praises TN Astrologers

வெளியிடப்பட்ட நேரம்: 20:09 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:09 (15/05/2019)

`மழைக் கணிப்பில் தமிழக ஜோதிடர்கள்போல் வருமா?!’ - உயர் நீதிமன்றம் பெருமிதம்

வானவியல் நிகழ்வுகளைத் தமிழக ஜோதிடர்களைப்போல மேலை நாட்டவர்களால் கணிக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்


தமிழகத்தில் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஃபானி புயலும் தமிழகத்தை ஏமாற்றியதால் கடலோர மாவட்டங்களில் வறண்டக் காற்று வீசுகிறது. பல மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு யாகம் நடந்த கடந்த மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப யாகம் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், தங்கள் மண்டலங்களுக்கு உட்பட்ட கோயில்களில் எந்தெந்தக் கோயில்களில் எந்தத் தேதிகளில் மழைவேண்டி யாகம் செய்யப்படவுள்ளது என்பதற்கான விவரத்தைப் பட்டியலிட்டு அதுதொடர்பான தகவல்களைத் தெரிவிக்கவும் மண்டல இணை ஆணையர்களை அறநிலையத்துறை கேட்டுக்கொண்டது.

இந்துசமய அறநிலையத்துறையின் இந்தச் சுற்றறிக்கை தொடர்பாக, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் இந்து அறநிலையத்துறையின் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், மழை வேண்டி கோயில்களில் நடைபெற்று வரும் யாகத்துக்குத் தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசே பணம் ஒதுக்குவது என்பது சட்ட விரோதமானது. அரசாங்கமே இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக ஜோதிடர்களைப்போல் அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளை மேலை நாட்டவர்களால் கணிக்க முடியாது. இதுபோன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே  நடத்தப்படுகிறது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.