ரகசிய இடம்.. கோட் வேர்டு.. வெரிஃபிகேஷன் - சூலூரில் தீவிரமடையும் பணப்பட்டுவாடா! | Money distribution in Sulur byelection

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (16/05/2019)

கடைசி தொடர்பு:10:17 (16/05/2019)

ரகசிய இடம்.. கோட் வேர்டு.. வெரிஃபிகேஷன் - சூலூரில் தீவிரமடையும் பணப்பட்டுவாடா!

கோவை சூலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா தீவிரமடைந்துள்ளது.

சூலூர்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வருகின்ற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கெனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றிருக்கும் நிலையில், தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான தேர்தலாக இது கருதப்படுகிறது. அ.தி.மு.க-வில் கந்தசாமி, தி.மு.க-வில் பொங்கலூர் பழனிச்சாமி, அ.ம.மு.க-வில் சுகுமார், நாம் தமிழர் கட்சியில் விஜயராகவன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் மயில்சாமி, சமூக ஆர்வலர் பிரபாகரன் ஆகியோர் சூலூரில் போட்டியிடுகின்றனர்.

பலர் போட்டியிட்டாலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே தான் கடும் போட்டி. அ.ம.மு.க-வும் பரபரப்பாக களப்பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல பிரதான கட்சிகள் பணப்பட்டுவாடா பணியைத் தொடங்கிவிட்டன. பணம் வழங்குவதற்கான பட்டியலை அ.தி.மு.க ஏற்கெனவே தயாரித்துவிட்டது. பணம் வழங்குவதில், 20 ரூபாய் நோட்டு பார்முலா, ஸ்டிக்கர் பார்முலா என்று ஏகப்பட்ட பார்முலாக்களைக் கடந்த தேர்தல்கள் சந்தித்துவிட்டன.

பணப்பட்டுவாடா

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாள்களே இருப்பதால் பணப்பட்டுவாடா தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சூலூரில் பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் வீட்டுக்குச் சென்று பணம் வழங்குவதில்லை. வீட்டுக்குச் சென்று பிரச்னையாகிவிட்டால் சிக்கல் என்பதால், அந்தந்தப் பகுதிகளில் தங்களது பூத் ஆபீஸ் உள்ளிட்ட ஏதேனும் இடத்துக்கு சீக்ரெட்டாக வரவழைக்கின்றனர். ``பூத் ஸ்லிப் வாங்கியாச்சா?” இதுதான் கோட் வேர்டு. அவர்கள் சொல்லிய இடத்துக்குச் சென்றவுடன், வாக்காளர் பட்டியல், வரிசை எண், முகம் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பிறகே பணம் கொடுக்கின்றனர். உள்ளூர் நபர் ஒருவர் கை காட்ட, வெளியூர் நபருக்குத்தான் பணம் கொடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் ரூ.2,000 முதல் 3,000 வரையும், தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வில் ரூபாய் 1,000 முதல் 2,000-மும் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.