குப்பையில் கிடந்த காணாமல்போன மரகதலிங்கம் - இரண்டு ஆண்டு மர்மம் குறித்து தி.மலையில் விசாரணை! | Statue found in waste after two years

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (16/05/2019)

கடைசி தொடர்பு:08:45 (16/05/2019)

குப்பையில் கிடந்த காணாமல்போன மரகதலிங்கம் - இரண்டு ஆண்டு மர்மம் குறித்து தி.மலையில் விசாரணை!

வேட்டவலம் ஜமீனுக்குச் சொந்தமான விலை மதிக்க முடியாத பச்சை மரகதலிங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரகதலிங்கம் இப்போது குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மரகதலிங்கம் இருந்த கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஜமீன் பரம்பரையினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டின் அருகே உள்ள மலை மீதுதான் மனோன்மணி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை ஜமீனைச் சேர்ந்த மகேந்திர பண்டாரிங்கறவர்தான் நிர்வகித்து வருகிறார். இந்தக் கோயில், 800 ஆண்டுகள் பழைமையானது. இதன் சிறப்பே மரகதலிங்கம்தான். ஜமீன் பங்களா பாழடைந்து இருந்தாலும், மனோன்மணி அம்மன் கோயிலை தினசரி திறந்து பூஜைகள் செய்துவந்தனர். உரிய பாதுகாப்பு இல்லாமல் பல கோடி மதிப்பிலான கையளவு அகலத்தில், 300 கிராம் எடைகொண்ட பச்சை மரகதலிங்கத்தை, அந்தக் கோயிலில் வைத்து பூஜை செய்துவந்தனர்.

அந்த மரகதலிங்கம், 2017 ஜனவரி 8-ம் தேதி அன்று காணாமல் போனது. கோயிலில் மரகதலிங்கம் இருப்பது தெரிந்த கொள்ளையர்கள், கோயில் சுவரில் துளையிட்டு கருவறையிலிருந்த மரகதலிங்கத்தைத் திருடிச்சென்றனர். உடனே ஜமீன்தார் மகேந்திர பண்டாரியாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வேட்டவலம் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். வேட்டவலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு அந்த வழக்கு சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இந்த நிலையில், ஜமீன் தோட்டத்தில் வேலை செய்யும் பச்சையப்பன் என்பவர், ஜமீன் பங்களாவைச் சுத்தம் செய்துவிட்டு குப்பையை கொட்டுவதற்காகப் பங்களா பின்புறம் இருக்கும் குப்பை மேட்டுக்குச் சென்று குப்பையைக் கொட்டும்போது, பச்சை நிறத்தில் எதோ மின்னுவது போன்று தெரிந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது அது காணாமல் போன மரகதலிங்கம் என்று தெரிந்துள்ளது. உடனே அவர் ஜமீனுக்குத் தகவல் கொடுத்ததும், அவர்கள்  வேட்டவலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் மரகதலிங்கத்தைக் கைப்பற்றி, லிங்கத்தைத் திருடியது யார்; அவர்கள் ஏன் லிங்கத்தை இங்கேயே போட்டுச்சென்றார்கள் எனப் பல கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விசாரணைக்காகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், சிலை குறித்து விசாரணை மேற்கொள்ள நாளை திருவண்ணாமலை வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க