`கமலால் ஒண்ணும் நிகழவில்லை; ரஜினி தப்பித்துவிட்டார்!'- திருநாவுக்கரசர் பிரசாரம் | thirunavukkarasu campaign at sulur

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (16/05/2019)

கடைசி தொடர்பு:11:45 (16/05/2019)

`கமலால் ஒண்ணும் நிகழவில்லை; ரஜினி தப்பித்துவிட்டார்!'- திருநாவுக்கரசர் பிரசாரம்

சூலூர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தனி கட்சி குறித்து பேசிய திருநாவுக்கரசர்

``நானும் கட்சி ஆரம்பித்தேன், வைகோவும் கட்சி ஆரம்பித்தார். இது போன்று நிறைய  பேர் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால், தனியாகக் கட்சி ஆரம்பித்து எந்த பிரயோஜனமும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சூலூர் பிரசாரத்தில் பேசியுள்ளார்.

மே 19-ம், தேதி நடக்க இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்றவும், கைப்பற்றவும் இது முக்கியமான தேர்தல் என்பதால், தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரக் களத்தில் சுழன்று வருகிறார்கள். சூலூரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நேற்று கோவை பட்டணம்புதூர், இருகூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ``எதிர்காலத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும், நிகழ இருக்கிறது. கறுப்புப் பணம் மீட்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைச் சொன்ன மோடி அவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டனாக கிராமம் முழுவதும் சுற்றிய மோடி உலகம் சுற்ற ஆசைப்பட்டு உலகத்தைச் சுற்றிக் கொண்டிருந்தாரே ஒழிய வேறெதுவும் செய்யவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி, பணமதிப்பிழப்பு செய்தது மிகப்பெரிய மோசடி. அந்த மோசடியோடு (பி.ஜே.பி) சேர்ந்து உள்ளூர் மோசடியும் ( அ.தி.மு.க) கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த ஆட்சி எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்ஸுக்கும்  ஓட்டு போட்டு வந்த ஆட்சி அல்ல. இத்தனை மந்திரிகள் இருந்தும் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்க்காமல் அநாதையாகச் சாகடித்துவிட்டார்கள்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதுகூட மோடி வந்து பார்க்கவில்லை. நான் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்று முன்னாள் மந்திரிகளிடம் கேட்டேன். ஜெயலலிதா விரும்பவில்லை என்று சின்னம்மா சொன்னார். அவர்கள் சொல்லிவிட்டார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த இந்த அ.தி.மு.க அரசை  நீங்கள் தோற்கடிக்க வேண்டும். டி.டி.வி தினகரனுக்காக நான்கு தொகுதியில் வாக்களித்தால் எந்தவொரு ஆட்சி மாற்றமும் நிகழாது. கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒண்ணும் நிகழவில்லை. ரஜினிகாந்த் தப்பித்துவிட்டார். அதேபோல் புதிதாகக் கட்சி ஆரம்பித்தால் ஒன்றும் பயனில்லை. நான் கட்சி ஆரம்பித்தேன், வைகோ கட்சி ஆரம்பித்தார். இன்னும் நிறை பேர் கட்சி ஆரம்பித்தனர். தனித் தனியாக கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவது சாதாரண காரியமில்லை. வேண்டுமென்றால், நானும் முதல்வர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், முதல்வர் ஆக முடியாது. தனியாகக் கட்சி ஆரம்பித்து எந்த பிரயோஜனமும் இல்லை. மிக முக்கியமான இந்தத் தேர்தலில் தி.மு.க-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று பேசினார்.

தி.மு.கவை வெற்றிபெற வைக்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கட்சிகளை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். கூட்டணியில் உள்ள வைகோ கட்சி ஆரம்பித்ததைப் பற்றி திருநாவுக்கரசர் விமர்சித்துப் பேசியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்று மனம் வருந்துகிறார்கள் ம.தி.மு.கவினர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க