மீண்டும் மீண்டும் தேடிவர வைக்கும் பாலவநத்தம் கிராமத்துச் சீரணி! #MyVikatan | Palavanatham sirani and pennington library is familiar in Srivilliputhur

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (16/05/2019)

கடைசி தொடர்பு:12:05 (16/05/2019)

மீண்டும் மீண்டும் தேடிவர வைக்கும் பாலவநத்தம் கிராமத்துச் சீரணி! #MyVikatan

ஒவ்வோர் ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும். விருதுநகரில் சீரணிக்குக் கடைகள் இருந்தாலும் கூட விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள பாலவநத்தம் கிராமத்துச் சீரணி மிகப் பிரபலம்.

சீரணி

ஜிலேபி போலவே இருக்கும் சீரணியைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். இங்கே தயாராகும் சீரணியை வாங்க வெளியூர் மட்டுமன்றி வெளிமாநிலத்தவரும் வருகை தருவர். அவ்வளவு சுவையானது. இங்கே வாங்கும் சீரணி வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

முன்மாதிரியாகத் திகழும் பென்னிங்டன் நூலகம்

பென்னிங்டன் நூலகம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தமிழக அரசின் முத்திரையாக இடம் பெற்றுள்ள ஆண்டாள் கோயில் கோபுரமும், பால்கோவாதான். ஆனால் அதையும் தாண்டி புகழ்பெற்ற பென்னிங்டன் நூலகம் இங்கே இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. தமிழ்நாட்டின் பழைமையான நூலகத்தில் ஒன்றான இது 1875-ம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவரால் தொடங்கப்பட்டது. இன்று பென்னிங்டன் என்ற அவரது பெயராலேயே இந்த நூலகம் அழைக்கப்பட்டு வருகிறது. வாசிப்புத் திறன் குறைந்து வருகிறது என நாம் ஆதங்கப்பட்டாலும் கூட 143 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நூலகத்துக்குத் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் வருகை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பென்னிங்டன் நூலகம்

அபூர்வமான தமிழ் நூல்கள் பல இங்கே உள்ளன. தமிழக அரசிதழ்கள், அரசாணைகள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள் எனப் பலரும் இந்த நூலகத்தைத் தேடி வருகின்றனர். பெண்கள், சிறுவர், போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு எனத் தனித்தனியாக இடங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் எழுத்தாளரின் படைப்புகளும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. நூலகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பென்னிங்டன் நூலகம் உள்ளது.