ஏமாந்த 15,000 பேர்... ரூ.50 கோடி மோசடி! - வீட்டுமனைப் பெயரில் வாரிச் சுருட்டிய மதுரைக் கும்பல் | Vellore Police arrests 4 over cheating

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (16/05/2019)

கடைசி தொடர்பு:13:20 (16/05/2019)

ஏமாந்த 15,000 பேர்... ரூ.50 கோடி மோசடி! - வீட்டுமனைப் பெயரில் வாரிச் சுருட்டிய மதுரைக் கும்பல்

குறைந்த விலையில் வீட்டுமனை தருவதாகக் கூறி 15,000-க்கும் மேற்பட்டோரிடம் 50 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் நான்கு பேர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புழல் சிறை

மதுரையைச் சேர்ந்தவர்கள் சரவணக்குமார் (45), நமச்சிவாயம் (45), கணேசன் (44), கதிரவன் (45). இவர்கள் நான்கு பேரும் கூட்டுச் சேர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம் எனத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் `மதுரம் புரோமோட்டர்ஸ் அண்டு பிராப்பர்ட்டிஸ் லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனத்தைத் தொடங்கினர். தவணை முறையில் மாதாமாதம் பணம் செலுத்தினால் வீட்டுமனை தருவதாக கவர்ச்சி விளம்பரங்களைச் செய்தனர். இதை உண்மை என்று நம்பி, தமிழகம் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை வாங்க ஆசைப்பட்டு மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்திவந்தனர். இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு திடீரென அந்த நிறுவனத்தை மூடிவிட்டு இயக்குநர்கள் நான்கு பேரும் பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். 

ஏமாற்றமடைந்தவர்கள், வேலூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர். விசாரணையில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1,200 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்டோரிடம் 50 கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதும், அந்தப் பணத்தில் 900 ஏக்கர் நிலங்களை வாங்கி தங்களின் பெயரில் நிதி நிறுவன இயக்குநர்கள் பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு (சென்னை) எஸ்.பி விஜயகுமார் உத்தரவின்பேரில், வேலூர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். மதுரையில் தலைமறைவாக இருந்த மதுரம் நிறுவனத்தின் இயக்குநர்கள் நான்கு பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து, 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களைக் கைப்பற்றிய போலீஸார், சென்னைப் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.