`ஆர்.கே.நகரில் காலி செய்தோம்; ஓட்டப்பிடாரத்தில் எப்படி உதவுவோம்!'- ஈ.பி.எஸ்ஸுக்கு டி.டி.வி பதில் | TTV Dhinakaran slams EPS

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (16/05/2019)

கடைசி தொடர்பு:14:25 (16/05/2019)

`ஆர்.கே.நகரில் காலி செய்தோம்; ஓட்டப்பிடாரத்தில் எப்படி உதவுவோம்!'- ஈ.பி.எஸ்ஸுக்கு டி.டி.வி பதில்

``அ.தி.மு.க அமைச்சர்கள் அவர்களின் உறவினர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கி பணம் பார்க்கும் டெண்டர் கட்சியாக உள்ளது. ஆனால், அ.ம.மு.கதான் தொண்டர்களின் கட்சியாக இருக்கிறது” என தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து டி.டி.வி.தினகரன், புதுக்கோட்டை, கோரம்பள்ளம், ஹவுசிங்போர்டு, மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், தருவைக்குளம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தில் உள்ளூர் அமைச்சர்கூட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தூத்துக்குடிக்குப் பக்கத்தில் உள்ள கோவில்பட்டிக்கு வந்த முதலமைச்சர் ஒருமுறைகூட மக்களிடமோ, அவர்களின் பிரதிநிதிகளையோ அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சுடச் சொன்னவர் யார், யார் சொல்லி சுட்டார்கள், சுட்டவர்களுக்கு என்ன தண்டனை, இந்தக் கேள்விகளுக்கு விடையே இல்லை. ஸ்டெர்லைட் பிரச்னையை எடப்பாடியும், பன்னீர்செல்வமும் சரியாக கையாளாததால் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். சசிகலாவால் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவர் நினைத்திருந்தால் என்னைக்கூட முதல்வராக ஆக்கியிருக்கலாம்.

டிடிவி தினகரன் பிரசாரம்

சசிகலாவுக்குப் பையன் முறைதான் நான். எனக்குப் பதவி ஆசை இருந்தால் எங்க சித்தி சசிகலாவிடம் பேசியிருப்பேன். ஆனால், பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து அவரை முதலமைச்சராக ஆக்கியதற்கு, தன்னை அடையாளம் காட்டி முன்னிலைப்படுத்திய கட்சிக்கே துரோகம் இழைத்தவர்தான் இந்த பழனிசாமி. அ.தி.மு.க அமைச்சர்கள் அவர்களது உறவினர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கி பணம் பார்க்கும் டெண்டர் கட்சியாக உள்ளது. ஆனால், அ.ம.மு.கதான் தொண்டர்களின்  கட்சியாக இருக்கிறது.

தி.மு.க-வுக்கு அ.ம.மு.க உதவி செய்வதாக எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். ஆர்.கே.நகரில் தி.மு.க-வை காலி செய்தோம். ஓட்டப்பிடாரத்தில் மட்டும் எப்படி தி.மு.க-வை ஜெயிக்க உதவி செய்வோம். எந்த சாதி, மதத்தையும் தீவிரவாதம் எனப் பேசுவது தவறுதான். பிரசாரத்தில் கமல் பேசியதற்கு தனது எதிர்ப்பை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகரிகமாகப் பதிவு செய்திருக்கலாம். அவர் ஒரு மனிதர் போலப் பேசவில்லை” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க