ஆற்றங்கரையில் கிடந்த சிதறிக்கிடந்த ஆதார் அட்டைகள்! - திருத்துறைப்பூண்டி அதிர்ச்சி | Aadhaar cards were dropped on the riverbank near Thiruthuraipoondi

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (16/05/2019)

கடைசி தொடர்பு:16:55 (16/05/2019)

ஆற்றங்கரையில் கிடந்த சிதறிக்கிடந்த ஆதார் அட்டைகள்! - திருத்துறைப்பூண்டி அதிர்ச்சி

திருத்துறைப்பூண்டி அருகே ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள் ஆற்றங்கரையில் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை. இன்றைக்குப் பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவரின் அடையாளமாக இருப்பது ஆதார் அட்டைதான். இந்தியர்களின் ஆதாரமே இந்த அடையாள அட்டைதான் என்ற வகையில் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை அந்த அட்டை இல்லாமல் பெற முடியாது என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரங்கம் கிராமத்தில் முள்ளியார் ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள் வீசப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆதார் அட்டைகள் ஆதிரங்கம், கட்டிமேடு, வடபாதி, தென்பாதி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுடையது. தாங்கள் விண்ணப்பித்த ஆதார் அட்டை இப்படிக் குப்பைபோல் வீசப்பட்டு இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன்பாபு அந்த இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இது எவ்வாறு நடந்தது என்று உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

ஆதார்  அட்டைகள் வருவாய்த்துறை வசம் வராததால், இது அஞ்சல் மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து கட்டிமேடு கிராம நிர்வாக அலுவலர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆதார் அட்டைகளை இப்படி வீசிச் சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள் ஆற்றங்கரையோரம் வீசப்பட்டுக் கிடப்பது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, கஜா புயலின் போது தொலைந்துபோன ஆதார் அட்டைக்கு மாற்றாக இந்த அட்டைகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.