`பைக்கை எரிக்கச் சொன்னாரா முதல்வர்?!' - அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது? | Controversy erupts in Alagappa university after hostel wardens bike burn incident

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (16/05/2019)

கடைசி தொடர்பு:19:33 (16/05/2019)

`பைக்கை எரிக்கச் சொன்னாரா முதல்வர்?!' - அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வள்ளல் அழகப்பர் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இதில், உடற்கல்வித் துறையும் அதன் மாணவர்கள் தங்குவதற்கான மாணவர் விடுதியும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தத் துறையின் முதல்வராகச் சுந்தர் இருக்கிறார். இவருக்கும், விடுதிக் காப்பாளர் காளீஸ்வரனுக்கும் ஏழாம் பொருத்தம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

காளீஸ்வரன் உதவிப் பேராசிரியர் என்பதால், வேறு பல்கலைக்கழகத்துக்குச் செய்முறைத் தேர்வுக் கண்காணிப்பாளராகச் சென்றுவிட்டார். ஊரிலிருந்து வந்திறங்கியதும், பைக் எடுத்துச் செல்வதற்காக விடுதியில் அந்த வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. இன்றுவரை, இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்காதது ஏன் என்று உளவுத்துறை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்குக் கொடூரமாக இச்சம்பவம் நடந்திருப்பது பல்கலைகழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எரிக்கப்பட்ட பைக்

காளீஸ்வரனுடைய  இரண்டு சக்கர வாகனம், அங்கே படிக்கும் மாணவர் வசந்த் என்பவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக போலீஸார் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவத்தை காவல் துறைக்குத் தெரியப்படுத்தாமல் மூடிமறைக்க நினைத்தது பல்கலைக்கழகம். மூன்று நாள்கள் கழித்து, இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது காவல் துறைக்குக் காலதாமதமாகத் தெரிய வந்தது. அதன்பிறகுதான் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையில் விடுதிக் காப்பாளர் பைக்கை எரித்தது அங்கே படிக்கும் மாணவர் வசந்த் என்றும், அந்தச் சம்பவத்தை செய்யச் சொன்னது அந்தக் கல்லூரியின் முதல்வர் சுந்தர் என்றும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இந்தநிலையில், பல்கலைக்கழகப் பதிவாளர் குருமல்லேஸ்பிரபு, ```அவர்கள் மீது நாங்களே நடவடிக்கை எடுத்துக்கொள்ளுகிறோம்' என்று கூறி விசாரணை அறிக்கையைப் பெற்றுக்கொண்டார். இவர் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குழு விசாரணையைக் கண்துடைப்புக்காகத் தொடங்கியிருக்கிறது'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.

வசந்த்முதல்வர் சுந்தர்இதுதொடர்பாக அழகப்பா பல்கலைக்கழகம் பதிவாளர் குருமல்லேஸ் பிரபுவிடம் கேட்டோம். ``எங்கள் பல்கலைக்கழகத்தில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்திருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதற்காகவும், இந்தக் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்கட்ட விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்ட விசாரணையில்தான் யார் குற்றவாளி என்று தெரியும். அப்போது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை உண்டு. இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய  வசந்த் என்கிற மாணவனுக்கு ரிசல்ட் நிறுத்தி வைத்திருக்கிறோம்'' என்றார்.

பைக் எரிக்கப்பட்ட வார்டன் காளீஸ்வரனிடம் பேசினோம். ``என்னுடைய பைக் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்கலைக்கழகம்தான் புகார் கொடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக பல்கலைக்கழகம் விசாரணை செய்துகொண்டிருக்கிறது. இதற்கு மேல் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது" என்றார்.

`முதல்வர் சொல்லித்தான் பைக் எரித்தேன் என்று வசந்த் ஒப்புக்கொண்டது' குறித்தும், `காளீஸ்வரன் மீது அப்படியென்ன உங்களுக்குக் கோபம்' என்றும் கேட்டோம். ``சார், நான் வெளியில் இருக்கிறேன்'' என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார். அவர் விளக்கம் கொடுத்தவுடன் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க