இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மரகதலிங்கம் - பின்னணி குறித்து சந்தேகிக்கும் மக்கள்! | Marakathalingam found in after two years

வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (16/05/2019)

கடைசி தொடர்பு:21:46 (16/05/2019)

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மரகதலிங்கம் - பின்னணி குறித்து சந்தேகிக்கும் மக்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டவலம் ஜமீனுக்குச் சொந்தமான விலை மதிக்க முடியாத பச்சை மரகதலிங்கம் திருடுபோனது. அந்த மரகதலிங்கம், நேற்று ஜமீன் பங்களாவுக்கு அருகில் உள்ள குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்டது. திருடுபோன மரகதலிங்கம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பகுதியில் கிடைத்ததால் அப்பகுதி மக்களிடையேயும் போலீஸாரிடையேயும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரகதலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் பண்டாரியர்கள் எனப்படும் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறனர். ஜமீன் பங்களாவுக்கு அருகில் உள்ள மலையின்மீது, மலைக்கோயில் என்று அழைக்கப்படும் பழைமை வாய்ந்த மனோன்மணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஜமீனுக்குச் சொந்தமான இந்தக் கோயிலை ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்த மகேந்திர பண்டாரியர் என்பவர்தான் நிர்வகித்து வருகிறார். இந்தக் கோயிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகதலிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அன்று திருடுபோனது. திருடர்கள் கோயிலின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டுப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பச்சை மரகதலிங்கம் மற்றும் அம்மன் தங்கத்தாலி, கிரீடம், ஒட்டியாணம் ஆகியவற்றையும் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக வேட்டவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நான்கு தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில், மரகதலிங்கம் திருடுபோனது பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

பொன் மாணிக்கவேல்

இந்நிலையில், நேற்று மாலை (மே 15-ம் தேதி) பச்சையப்பன் என்பவர் ஜமீன் பங்களாவுக்குப் பின்புறத்தில் உள்ள குப்பைமேட்டில் குப்பை கொட்டச் சென்றபோது, அங்கு பச்சை நிறத்தில் ஏதோ மின்னுவது போன்று தெரிந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது அது காணாமல்போன மரகதலிங்கம் என்று தெரிந்துள்ளது. இதுபற்றி வேட்டவலம் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும், அவர்கள் மரகதலிங்கத்தைக் கைப்பற்றினர். மரகதலிங்கம் கிடைத்ததைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை நடத்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் வேட்டவலம் வந்து விசாரணை நடத்திவிட்டு லிங்கம் கிடைத்த குப்பை மேட்டையும் மனோன்மணி அம்மன் கோயிலையும் பார்வையிட்டுச் சென்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திருடுபோன மரகதலிங்கம், ஜமீன் பங்களா பின்புறம் உள்ள குப்பை மேட்டிலேயே  கிடைத்துள்ளதால் அந்தப் பகுதி மக்களிடையேயும் போலீஸாரிடையேயும் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

பொன் மாணிக்கவேல்

லிங்கத்தைத் திருடியவர்கள் வேட்டவலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனக் காவல்துறையினர் சந்தேகித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறனர். மரகதலிங்கம் திருடுபோன நாள் அன்று, பங்களா சுற்றியும் கோயிலைச் சுற்றியும், அந்தப் பகுதி முழுவதும் பல இடங்களில் காவல்துறையினர் தீவரமாகத் தேடினர். மோப்ப நாய் வரவைக்கப்பட்டும் தேடுதல் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் கிடைக்காத லிங்கம், இப்போது குப்பையில் கிடைத்தது எப்படி எனச் சந்தேகித்து வருகிறனர். மரகதலிங்கத்தோடு திருடுபோன மற்ற பொருள்கள் கிடைக்காத நிலையில், `மரகதலிங்கம் மட்டும் கிடைத்துள்ளது என்றால் மற்ற பொருள்களை விற்பனை செய்ய முடிந்த திருடர்களால் மரகதலிங்கத்தை விற்பனை செய்ய முடியவில்லையா. லிங்கத்தை விற்பனை செய்யும்போது காவல்துறையிடம்  மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் குப்பையில் போட்டுவிட்டுச் சென்றார்களா அல்லது வெளியே எடுத்துக்கொண்டு போகும்போது காவல்துறையிடம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் குப்பையில் போட்டுவிட்டுச் சென்றார்களா' என மக்கள் சந்தேகிக்கிறனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க