`இதெல்லாம் ஒரு பெருமையா?' - எடப்பாடியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்! | Udhayanithi Stalin slams tamilnadu chief minister in his campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (17/05/2019)

கடைசி தொடர்பு:07:50 (17/05/2019)

`இதெல்லாம் ஒரு பெருமையா?' - எடப்பாடியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

`முந்தைய தேர்தலில் மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவிற்காகத்தான்.  எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக முதலமைச்சர் என்ற பதவி, பிரதமர் நரேந்திர மோடி போட்ட பிச்சை' என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஸ்பிக் நகர், மாப்பிள்ளையூரணி, செக்காரக்குடி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ``மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது. தற்போது இங்கு டெட்பாடியின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ஆணி அடிப்பதற்குதான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.

உதயநிதி

ஆகவே,  டெட்பாடியின் ஆட்சியின் சவப்பெட்டிக்கு ஆணி அடித்து வெளியேற்ற வேண்டும். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபற்றி முதலமைச்சரிடம் கேட்ட பொழுது நான் இன்னும் தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை என அலட்சியமாக பதில் கூறினார். இப்படிப்பட்ட முதல்வர் நமக்குத் தேவைதானா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது தவிர தனது ஆட்சிக்காலத்தில் 36,000 போராட்டங்கள் நடைபெற்றதாக அவரே ஆட்சியைப் பெருமைப்படுத்திக்கொள்கிறார். இதெல்லாம் ஒரு பெருமையா. முந்தைய தேர்தலில் மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக முதலமைச்சர் என்ற பதவி, பிரதமர் நரேந்திர மோடி போட்ட பிச்சை.

உதயநிதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனக்கூறி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கூறியவர் ஓ.பி.எஸ். ஆனால், தற்போது வரை விசாரணை கமிஷனின் விசாரணைக்குகூட அவர் ஆஜராகாமல் இருந்து வருவது ஏன்?

அ.தி.மு.க-வினரின் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே அவர்களால் பாதுகாப்புக் கொடுக்க முடியவில்லை. இதில் அவர்கள், மக்களை எப்படி பாதுகாப்பார்கள். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிதான் முழுவதும் வெற்றி பெறப்போகிறது.

எதிர்க்கட்சி தி.மு.க ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் எனக் கேட்டார் மோடி. இந்த மக்கள் விரோத பா.ஜ க, அ.தி.மு.க ஆட்சியை வெளியேற்றுவதை தவிர மக்களுக்கு செய்யும்  வேறு நல்ல விஷயம் எதுவாக இருக்க முடியும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க