பொதுமக்கள் அளித்த தகவல் - புதுக்கோட்டையில் அடுத்தடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட 4 குழந்தைத் திருமணங்கள் | 4 child marriages in Pudukottai on the same day stopped

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (17/05/2019)

கடைசி தொடர்பு:08:25 (17/05/2019)

பொதுமக்கள் அளித்த தகவல் - புதுக்கோட்டையில் அடுத்தடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட 4 குழந்தைத் திருமணங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், விராலிமலைப் பகுதிகளில் 4 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த குழந்தைத் திருமணங்கள் சைல்டு லைன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குழந்தை திருமணம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வெள்ளாஞ்சார் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் அத்தை மகனுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் சைல்டு லைனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, புதுக்கோட்டை சைல்டு லைன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். சிறுமியின் பெற்றோரிடம் இந்தத் திருமணத்தினால் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் மற்றும் அறிவியல் பூர்வ பிரச்னைகள் போன்றவற்றை எடுத்துக் கூறினர். மேலும், 18 வயதுக்கு கீழ் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளையாக இருந்தாலும், திருமணம் செய்து வைப்பது குற்றமாகும் என்று எச்சரித்தனர். இதன் காரணமாக திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதேபோல், விராலிமலை பகுதிகளில் கோவில்காட்டுப்பட்டி, கோமங்கலம், ராஜகிரி கிராமங்களில் சிறுமிகளுக்கு நடைபெற இருந்த குழந்தைத் திருமணத்தைச் சமூக நல அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். திருமணம் நடைபெற இருந்த சிறுமிகள் 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சைல்டு லைன் அதிகாரிகள் கூறும்போது, ``அன்னவாசல், விராலிமலை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகப் புகார் வருகிறது. தற்போது, புகாரின் அடிப்படையில் 4 குழந்தைத் திருமணங்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்தப் பகுதிகள் சைல்டு லைனால் கண்காணிக்கப்படும். இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் உடனே சைல்டு லைனை அழைக்கலாம்" என்றனர்.

``குழந்தைத் திருமணம் குறித்து கிராமப் பகுதி மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அரசு அதிகளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.