``ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களை விடமாட்டேன்!" - சூலூரில் ஸ்டாலின் ஆவேசம் | DMK leader MK Stalin campaign in Sulur

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (17/05/2019)

கடைசி தொடர்பு:08:50 (17/05/2019)

``ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களை விடமாட்டேன்!" - சூலூரில் ஸ்டாலின் ஆவேசம்

``ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களை விடமாட்டேன்” என்று சூலூர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சூலூரில் இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு வாக்குக் கேட்கும்போது, கருணாநிதி நினைவிடத்துக்கு நடந்த சட்டப் போராட்டம், ஆட்சி மாற்றத்துக்கான கூட்டணிக் கணக்கு என்று வழக்கம் போலவே பேசினார். முந்தைய பிரசாரங்களில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது நேரடியாகக் குற்றம் சாட்டி வந்தார் ஸ்டாலின். ஆனால், இதுதொடர்பாக போலீஸில் வழக்கு பதிந்துள்ளதால், சூலூரில் எடப்பாடி மற்றும் ஜெயராமன் பெயரை குறிப்பிடாமல், அந்த வழக்கு குறித்து மட்டும் பேசினார் ஸ்டாலின். குறிப்பாக, ஜெயலலிதா மரணம் குறித்து சற்று ஆவேசமாகப் பேசினார்.

ஸ்டாலின்

``2016 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க-வினருக்கு நம்மைவிட 1 சதவிகிதம் அதிகமாக வாக்கு கிடைத்துவிட்டது. அதனால்தான் அவர்கள் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால், மக்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தனர். ஜெயலலிதா இறந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியுள்ளார். நான் பிரசாரத்துக்குச் செல்லும்போது பல இடங்களில் அ.தி.மு.க-வினரே எனக்குத்தான் வாக்களிப்பேன் என்று கூறினார்கள். `ஏன்?” என்று கேட்டதற்கு, `நீங்கள்தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதற்காகத்தான்’ என்று கூறினார்கள். மேலும், முதல்வராக இருக்கும்போது ஜெயலலிதா உயிரிழந்துள்ளார். எனவே, நாம் ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்துக்கு யாரெல்லாம் காரணமோ, அவர்களைப் பிடித்து,  ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுப்போம். யாராக இருந்தாலும் விடமாட்டேன். மே 23-க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது. மத்தியிலும் ராகுல்தான் அமரப் போகிறார். மோடி மற்றும் எடப்பாடியின் கதை காலி. நான் சொல்வது நடக்கும். நான் கருணாநிதின் மகன்” என்று ஸ்டாலின் பேசினார்.