`இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார்..?’ - கமல் கொடுத்த நீண்ட விளக்கம்! | I am not afraid of being arrested says kamal

வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (17/05/2019)

கடைசி தொடர்பு:10:31 (17/05/2019)

`இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார்..?’ - கமல் கொடுத்த நீண்ட விளக்கம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது , `` சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’  எனத் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சில இந்து அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், பிரதமர் மோடியும், சில பிரபலங்களும் கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். தான் பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கமல் பிரசாரம்

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக கமல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நேற்று அரவக்குறிச்சியில் நடந்த கமல் பொதுக்கூட்டத்தில் கல், முட்டை போன்றவை வீசப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசும்போது, `` அரவக்குறிச்சியில் நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இது பல வருடங்களாக கூறப்பட்டது. தற்போது திடீரென அவர்கள் தங்களின் செளகர்யத்துக்காக இதைக் கவனித்து விமர்சிக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதே கருத்தை நாடாளுமன்றத் தேர்தல் இறுதிப் பிரசாரத்தின்போது மெரினாவில் நான் பேசியிருந்தேன். அரவக்குறிச்சியில் பேசிய அதே வார்த்தைகளை மெரினாவிலும் கூறினேன். அப்போது தன்னம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு தற்போது நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால் எது கிடைக்கிறதோ அதை வைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். 

கமல்ஹாசன்

நான் செல்லும் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களில் பதற்றம் உருவாக்கவில்லை. உருவாக்குகிறார்கள். பிரதமர் மோடிக்கு நான் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. அவருக்குச் சரித்திரம் பதில் கூறும். பிரதமர் அபாரமான ஞானம் உள்ளவர் எனப் பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். அவருக்குப் பதில் கூற சரித்திரமும் சரித்திர ஆசிரியர்களும் உள்ளனர் அவர்களே பதில் கூறுவார்கள். என்னை எல்லோரும் குறை கூறும்போது நானும் பிறரைக் குறை கூறத்தான் செய்வேன், தலையையும் வாலையும் கத்தரித்துவிட்டால் யாரும் யாரையும் திட்டுவதுபோல் சித்திரித்துவிட முடியும். முன்னால் நான் பேசியதைப் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம். ஆனால் பார்க்க நினைக்காதவர்கள், பார்க்கச் சகிக்காதவர்கள் இப்படித் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். 

இந்த விஷயத்தைப் பற்றி தலைவர்களோ, பரப்புரையாளர்களோ இனி பேசக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. என் கருத்தை தி.மு.க ஆதரிக்கவில்லை என்றால் அவர்களுக்கும் தனிக் கொள்கைகள் இருக்கும். அதனால் என் கருத்தை ஆதரிக்காமல் இருக்கலாம். கைதுக்கு நான் பயப்படவில்லை. என்னுடைய பிரசாரங்கள் நின்றுவிடும் என்ற எண்ணம் மட்டும்தான் உள்ளது. வேண்டுமென்றால் என்னைக் கைது செய்யட்டும் அப்படிச் செய்தால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும் என்பது என்னுடைய அறிவுரை. அதனால் என்னைக் கைது செய்யாமல் இருப்பதுதான் நல்லது. என் பணியை செய்யவிடாமல் நிறைய அரசியல் குறுக்கீடுகள் உள்ளன. சூலூரில் எங்களுக்கு இறுதியாக முக்கியமான பிரசாரம் இருந்தது. பதற்றம் காரணமாக எங்களுக்குப் பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை. அப்படி பதற்றம் நிலவுகிறது என்றால் சூலூர் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது. அமைச்சர் என்னை மிரட்டியதாக நான் எண்ணவில்லை. அரசியல் தரம் தாழ்ந்துகொண்டே போகிறது. அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர். நாங்கள் பரிசுத்தமானவர்கள் என யாராலும் கூற முடியாது. அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் இருப்பதை வரலாறு காட்டுகிறது.

பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து எனக்கு எதிர்ப்பு வந்துள்ளது. அவை அனைத்தும் சரியான போராட்டம் இல்லை என மக்கள் புரிந்துகொள்வார்கள். இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மொத்தமாகப் பேசக்கூடாது. அரசியல் சார்ந்தவர்கள் அனைத்துக்கும் புண்படுவார்கள். அரசியல் சாராதவர்கள் இரு நிமிடம் யோசிப்பார்கள். புண் படுவது, தாக்குவது இவை அனைத்தும் தனிப்பட்ட அரசியல் சாதனங்கள். கையில் எடுத்து விளையாடும் வன்முறை சாதனங்கள். எனக்கு முறையான பாதுகாப்பு இருந்தது அதை மீறித்தான் முட்டை, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. ஒரு பெரியக் கூட்டம் அல்லது நிறையப் பேர் எனக்கு எதிராக இருந்தார்கள் என்றால் நான் பயப்படலாம் ஆனால் அங்கு இருந்தது நான்கு, ஐந்து பேர் மட்டுமே’  எனப் பேசியுள்ளார்.