``சிகிச்சைக்குக்கூட அனுமதிக்கல!” - கொத்தடிமை கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட பெண் கண்ணீர் | in thanjavur 50 slave labours saved by officers

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (17/05/2019)

கடைசி தொடர்பு:11:45 (17/05/2019)

``சிகிச்சைக்குக்கூட அனுமதிக்கல!” - கொத்தடிமை கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட பெண் கண்ணீர்

பாபநாசத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 44 பேர் மீட்கப்பட்டனர். ``என் கணவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார் அதற்கு  சிகிச்சைப் பெறுவதற்கு செல்லக்கூட எங்களை அனுமதிக்கவில்லை. எங்கள் பேச்சைக் கேட்காமல் வெளியே சென்றால் அதிகமாக பணம் வாங்கியதாக பத்திரத்தில் எழுதி ஆயுசுக்கும் நீங்க இங்கேயே வேலை பார்க்கிற மாதிரி செய்துவிடுவோம் என மிரட்டினார்கள்” என மீட்கப்பட்ட பெண் ஒருவர் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கொத்தடிமை

தஞ்சாவூர் பாபநாசம் அருகே உள்ள தேவன்குடியில் மூன்று பேருடைய செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 44 பேர் மீட்டக்கப்பட்டனர். தேவன்குடியில் சேகர் என்பவர் நடத்தி வந்த செங்கல் சூளையில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 24 பேரும், இதேபோல் ராஜூ என்பவரின் செங்கல் சூளையில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 18 பேரும், மணி என்பவரின் செங்கல் சூளையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 44 பேர் கொத்தடிமைகளாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். மேலும், இவர்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் மற்றும் உணவு எதுவுமே செய்துகொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது குறித்த தகவலை தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று கும்பகோணம் ஆர்.டி.ஓ.,வீராசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றது

அதிகாரிகள்

இதையடுத்து,  ஆர்.டி.ஓ., வீராசாமி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று தேவன்குடிக்குச் சென்று விசாரணை நடத்தி கொத்தடிமைகளாக வேலை பார்த்த 44 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை இரண்டு சரக்கு ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரியலூரைச் சேர்ந்த சுமதி என்பவர், ``நாங்கள் செங்கல் சூளையில் சொல்ல முடியாத சித்ரவதைகளை அனுபவித்தோம். என் கணவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். அதற்கு  சிகிச்சைப் பெறுவதற்கு செல்லக்கூட எங்களை அனுமதிக்கவில்லை. ஒழுங்கான சாப்பாடு, தங்குவதற்கு இடம் என எதுவும் இல்லாமல் அவதிப்பட்டோம். என் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது அதற்குகூட செல்ல விடவில்லை.

எங்களுடைய போதாத காலம் சூளை முதலாளியிடம் ரூ 50,000 மட்டும் கடன் வாங்கினோம். அதற்கு பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டனர். அதை வைத்தே, `எங்கள் பேச்சை கேட்காமல் எங்கயாவது வெளியே சென்றால் பணத்தை அதிகமாக வாங்கியதாக எழுதி ஆயுசுக்கும் நீங்க இங்கேயே வேலை பார்க்கிற மாதிரி செய்து விடுவோம்' என மிரட்டுவார். என்ன சார் நியாயம். எங்களுக்கும் ஆசா பாசம் இருக்காதா. நாங்களும் மனுசங்கதானே என அழுது புலம்புவோம்.  ஆனால், இப்பதான் விடிவுகாலம் வந்திருக்கு” எனக் கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் அழுது புலம்பினார். 

அதன்பிறகு மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆ.டி.ஓ, வீராசாமி, ``செங்கல் சூளையில் ஒரு வருடத்தில் இருந்து 15 வருடம் வரை கொத்தடிமைகளாக வேலை பார்த்த தஞ்சாவூர் மற்றும் அரியலூரைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டனர். சூளை உரிமையாளரிடம் முன் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்துள்ளனர்.

வாகனம்

ஒரு குடும்பத்தில் அப்பா இவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அதற்காக அவர் மகனும், மருமகளும் வேலை பார்த்துள்ளனர். இது பரிதாபத்துக்குரியது. மேலும், செங்கல் உடைஞ்சாலோ அல்லது மழை பெய்து கரைஞ்சாலோ இவர்களுக்குச் செலவுக்கு காசு தரமாட்டார்கள். இதனால் பல துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சூளை உரிமையாளர் மூன்று பேரையும் தேடி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் சிலர், ``கொத்தடிமைகளாக வேலை பார்த்தவர்கள் மீட்கப்பட்டது பாராட்டுகுறியது. ஆனால், ஏற்கெனவே கந்தல் உடையைப்போல் நொந்து போய் காணப்பட்ட அவர்களை ஆட்டு மந்தைகளைப் போல சரக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்று அலட்சியம் செய்தனர். உரிய நேரத்தில் அவர்களுக்குச் சாப்பாடும் வாங்கி கொடுக்கவில்லை. தொண்டு நிறுவனம் ஒன்றுதான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தது. மீட்கப்பட்டவர்கள் மனிதர்கள். அவர்கள் மீது பரிவு காட்டி  உரிய மரியாதையைத்  தரவேண்டும்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க