``வரலாற்றை பேசியதற்காக அனுமதி மறுப்பா?” - கொந்தளிக்கும் மக்கள் நீதி மய்யத்தினர் | Ban for kamal meeting in sulur

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (17/05/2019)

கடைசி தொடர்பு:12:10 (17/05/2019)

``வரலாற்றை பேசியதற்காக அனுமதி மறுப்பா?” - கொந்தளிக்கும் மக்கள் நீதி மய்யத்தினர்

``சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் கோட்சே" என்று பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் சூலூரில் பிரசாரம் செய்ய கமல்ஹாசனுக்கு கோவை காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.


சூலூர் இடைத்தேர்தல் கமல்ஹாசன் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மயில்சாமி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மயில்சாமியை ஆதரித்து சூலூரில் முதல்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார் கமல்ஹாசன். இரண்டாம்கட்டமாக சூலூர், பாப்பம்பட்டி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 13 இடங்களில் இன்று கமல்ஹாசன் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டிருந்து. இந்த நிலையில், கமல்ஹாசன் பிரசாரம் செய்தால் இந்து அமைப்புகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே, கமல்ஹாசன் பிரசாரம் செய்ய அனுமதி மறுத்துள்ளது கருமத்தம்பட்டி போலீஸ்.

கமல்ஹாசனுக்குப் பிரசாரம் செய்யும்போது அவருக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் கறுப்புக் கொடி போராட்டம் அறிவித்திருப்பதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதைக் காரணமாகக்கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ``வரலாற்றைப் பேசியதற்காக அனுமதி மறுக்கலாமா. பிரசாரத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க இயலாத நிலையில்தான் கோவை போலீஸ் இருக்கிறதா. மோடி வருகையின்போதும் கறுப்புக்கொடி காட்டினார்கள். அதற்காக அவர் பயணத்தை ரத்து செய்தார்களா; அனுமதி மறுத்தார்களா. எது நடந்தாலும் நாங்கள் பிரசாரத்தைக் கைவிடமாட்டோம் என்பது போலீஸுக்கு நன்கு தெரியும்.

அதனால்தான், அனுமதியை மறுத்துள்ளார்கள். அனுமதியில்லாமல் நாங்கள் பிரசாரம் செய்தால், எதாவதொரு பிரச்னையைத் தூண்டி கலவரம் செய்துவிட்டு அனுமதியில்லாமல் பிரசாரம் செய்தீர்கள் என்று சொல்லவும், எங்களைக் கைது செய்யவும் அரசும், போலீஸும் சேர்ந்து செயல்படுகிறது. இதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்போம். அறம் வெல்லும்" என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க