`பிச்சை எடுத்து குழந்தைகளுக்கு இலவசமா டியூஷன் எடுக்கிறேன்’ - சிவகங்கை செல்வராஜ் #MyVikatan | Sivaganga beggar spending his earning for children studies

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (17/05/2019)

கடைசி தொடர்பு:13:15 (17/05/2019)

`பிச்சை எடுத்து குழந்தைகளுக்கு இலவசமா டியூஷன் எடுக்கிறேன்’ - சிவகங்கை செல்வராஜ் #MyVikatan

`பிச்சை எடுத்தாவது உன்னைப் படிக்க வைப்பேண்டா' இந்த வார்த்தைகளை மிடில் க்ளாஸ் வீடுகளில் பெற்றோர்கள் பயன்படுத்த நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், பிச்சை எடுத்து ஊரார் பிள்ளைகள் படிக்க உதவியும், டியூசனும் நடத்தி வருகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர்.

செல்வராஜ்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்தைக்கடை பகுதியில் உள்ள ஒடுக்கமான வீட்டில் வசித்து வருகிறார் செல்வராஜ். இவருக்கு இரண்டு கால்களும் இயங்காது. பி.ஏ பொருளாதாரம் படித்திருக்கிறார். இவருக்குச் சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள உசிலம்பட்டிதான். சென்னை, கோவை, திருச்சி, சேலம் என பல்வேறு ஊர்களில் பிச்சை எடுத்து தன் வயிற்றைக் காப்பாற்றி வந்தாலும் சென்ற இடங்களில் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் நடத்தியிருக்கிறார். மேலும், இவர் வாழ்க்கையின் கடைசி காலத்துக்காகக் காரைக்குடியில் குடியிருந்து வருகிறார்.

தினந்தோறும் காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்லும் பஸ்களில் பிச்சை எடுத்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக நோட்புக் வாங்கிக் கொடுப்பதோடு அவர்களுக்கு இலவசமாக டியூசன் நடத்தியும் வருகிறார். கடந்த 35 ஆண்டுகளாக இதுபோன்று சமூகத் தொண்டு செய்து வருகிறார் செல்வராஜ். பிச்சை எடுத்தால்தான் அடுத்த வேலைக்குச் சாப்பாடு என்கிற நிலையிருந்தாலும் சமூகப்பணியில் இருந்து இவர் விலகத் தவறவில்லை. தனக்குப் பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை ஏழைப்பிள்ளைகளுக்குப் படிக்க நோட்புக் வாங்கிக் கொடுங்கள் என்று பணம் படைத்த ஒரு சிலரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். இவரின் கோரிக்கைகளை ஒருசில பணமுதலாளிகளும் நிறைவேற்றி வருகிறார்கள்.

செல்வராஜ்

உயர்ந்த மனம் படைத்த செல்வராஜிடம் பேசினோம். ``கற்ற கல்வி வீண்போகக் கூடாது. வாழும் வரைக்கும் நம்மால் முடிந்த அளவில் நன்மை செய்ய வேண்டும் என்பது என் குறிக்கோள். யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக ரூ.1500-க்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறேன். இப்ப 13 மாணவர்கள் என்னிடம் படித்து வருகிறார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க